அத்தியாயம் - 1

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
அத்தியாயம் - 1
ஒரு அழகான மலையடிவார கிராமம். வயல் வெளிகளும், தோப்புகளும், மலைகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்து சாலையில் பச்சை கம்பளம் விரித்த வயல்வெளிகளுக்கு நடுவே சாலையில் புகுந்து வந்து நின்றது அந்த பல்லவன் மினிபஸ். பஸ்ஸிலிருந்து தன் குட்டி பேக்கை நெஞ்சோடு இறுக அணைத்தவாறு இறங்கினாள் பல்லவி.

பன்னிரெண்டே வயதான பல்லவி ஜுன்ஸ் பேன்ட் டீசர்ட் அணிந்திருந்தாள். மிரட்சியான கண்களோடு நாலாபுறமும் பார்வையை சுழல விட்டாள். முகத்தில் வயதுக்கு மீறிய சோகம். கண்களில் கலக்கம். புதுவிதமாக பயத்தோடு தன் மருண்ட விழியால் மறுபடியும் ஒருமுறை சுற்றி பார்த்தாள். இயற்கையின் கொடையாக மலைகளும், அம்மலையிலிருந்து வழிந்தோடும் நீர்நிலையும், அந்த நீரால் செழித்து நின்ற வயல் வெளிகளும், அந்த வயல்வெளிகளில் தஞ்சமடைந்த பறவை கூட்டமும், தூரத்தில் மரங்களின் அணிவகுப்பும், சிலு சிலு தென்றல் காற்றுமாக, கண்ணுக்கு விருந்தளித்து கொண்டிருந்த அந்த இடம் கூட பேதை பெண் பல்லவியை வசீகரிக்கவில்லை.

அந்த அளவு அந்த பெண் காயப்பட்டிருந்தாள். மனதால் கலங்கி போயிருந்தாள். உணர்வால் நொருங்கி போயிருந்தாள். காரணம் வாழ்வின் ஒரே ஆதாரமாக இருந்த தாயை அவள் இழந்திருந்தாள். அதிலும் இத்தனை வருடமாய் தன்னை தாங்கி கொண்ட ஒரே உறவை இழந்து நிற்கதியாய் நிற்கிறாள். அதிலும் அப்படி நிற்கதியாய் நின்ற அவளை... யாரும் ஆதரிக்க இன்றி தனிமரமாய் நின்ற அவளை...இதுவரை பழக்கமே இல்லாத ஒருவர் இந்த ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார்.

அவளும் வழி தெரியாமல் கிளம்பி வந்திருக்கிறாள். இது சரியா என பிரித்து பார்க்க சூழலும் இடம் தரவில்லை. அவள் வயதும் ஒத்து கொள்ளவில்லை. தாயின் மரண செய்தி அறிந்து உறவு என்று ஒரு சிலர் வந்தார்கள் தான். அவர்கள் தாயின் பூத உடல் மண்ணுக்குள் சென்றதும் கிளம்பி விட்டார்கள்.

எல்லாரும் போய் அடுத்து என்ன?... என தெரியாமல் தடுமாறி நின்ற போது தான் அவளின் தூரத்து உறவுகாரர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர், இப்போது இந்த கிராமத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். வேறு வழியின்றி அவளும் அவர் கையை பிடித்து கொண்டு வந்து விட்டாள். ஆனால் பயத்தில் அடிவயிறு கலங்க தான் செய்தது. நெஞ்சம் வேகம் வேகமாக துடிக்க தான் செய்தது. புது இடம். புது மனிதர்கள் . தன் வாழ்வின் அடுத்த நொடி எப்படியிருக்குமோ என்ற பரிதவிப்பில் இயற்கையை கூட ரசிக்க முடியாமல் பயத்தில் கண்களை உருட்டி கொண்டு நின்று கொண்டிருந்தவளை தொடர்ந்து இறங்கிய துரை பாண்டி,
கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு அவள் அருகில் வந்து பல்லவியின் பின்முதுகை அணைத்தவாறு.
"இதுதான் எங்க ஊர். புடிச்சிருக்கா பல்லவி."
என்றதும். நிமிர்ந்து ஒருமுறை அவரை பார்த்தவள்,
"ம்... ம்..."
என்றாளே தவிர வேறு எந்த வார்த்தையும் அவளிடமிருந்து வெளிவரவில்லை. மொத்தமாய் கலங்கி போய் நிற்கும் அவளை நார்மல் ஆக்கவே பேச தொடங்கிய பாண்டி,
. "உங்க ஊர் போல அடர்த்தியா வீடு எல்லாம் இங்க இருக்காது. எல்லா பொருள்களும் வீடு தேடி வராது. கம்பியூட்டர் உலகம் போல ஒடியாடி வாழ்ற வாழ்வு எல்லாம் இங்க இருக்காது."
" நீ இதுவரை வாழ்ந்துட்டிருந்த வாழ்க்கை முறையிலிருந்து மொத்தமா வேற ஒரு வாழ்க்கையை தான் நீ இங்க வாழ போறா. கொஞ்ச நாள் உனக்கு ரெம்ப கஷ்டமா தான் இருக்கும். ஆனா பழகி தான் ஆகணும்."
"சரி... வா... போலாம்."
என்றவாறு ஒரு கையில் பல்லவியின் கரத்தை பிடித்தவர் மறுகையால் கீழே வைத்திருந்த பேக்கை எடுக்க . பல்லவி அதே மிரட்சியான பார்வையோடே அவரை கலங்கும் கண்ணால் பார்த்தாள். மனது பயத்தின் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கேட்க வேண்டிய கேள்வி தொண்டை குழி வரை வந்து சிக்கி கொள்ள மெல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். துரைபாண்டியோ திரும்பி பார்க்காமல் அவளை பிடித்து கொண்டு நடக்க...
நொடிக்கு முன்னூறு முறை திரும்பி திரும்பி பார்த்தவாறே அவளும் தொடர..
.
அவள் முகத்திலோ ஒரு இறுக்கம். காரணம் தெரியாத ஒரு பயம். இவரை கூட அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. தாயின் மரணத்தில் தான் பார்த்தாள். தாய் உயிரோடு இருந்தது வரை எந்த உறவும் வந்ததில்லை.
மரணத்தில் வந்த உறவுகளில் இவரும் ஒருவர். இது மட்டும் தான் பல்லவிக்கு துரைபாண்டியை பற்றி தெரிந்தது. இதுவரை நன்றாக தான் பார்த்து கொள்கிறார். எதுவும் கேட்காவிட்டாலும் தேவையை அறிந்து செய்யவும் செய்கிறார். ஆனாலும் அவளுள் ஒரு நெருடல். கிராமம் என்கிறார். கண்ணுக்கெட்டும் தூரம் ஒருவரும் இல்லை. ஒரு வீடும் இல்லை. இந்த எண்ணம் தான் பல்லவியை பயத்தின் விழும்பில் வைத்திருக்க...
தயக்கத்தோடு நடந்தவளை திரும்பி பார்த்த பாண்டியோ ...
"என்ன பாப்பா எதுவும் வேணுமா? "
என நின்று திரும்பி அவள் முன் குத்துகால் போட்டு அமர்ந்து கேட்க,
"ம்கூம்..."
என இருபுறமும் தலையாட்டினாளே தவிர வார்த்தை எதுவும் வாயிலிருந்து வெளிவர மறுத்தது.
"அப்புறம் ஏன் ஒரு மாதிரி வரா?..."
என அவள் முகம் தாங்கி கொண்டு சிரித்த முகத்தோடு கனிவாக கேட்க , பயத்தை மெல்ல விலக்கியவள் தன் உதட்டை மெல்ல விலக்கி,
"வி... வீடு..."
என்றாள் படபடத்த விழியோடு.

"ஒ! வீடா... வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் போகணும் பாப்பா. ஊருக்குள்ள போக பஸ் வசதி எல்லாம் இல்ல. நடந்து தான் போயாகணும். இங்க இருந்து அரை கிலோ மீட்டர் நடந்தா கிராமம் வந்திடும். அதுவரை வயல் வெளியும், தோப்பும் தான். மலை பகுதி ஆனதால எப்பவும் நீர்வளம் நல்லாவே இருக்கும். விளைச்சலும் மூணு போகம் இருக்கும்."
"அந்தா தெரியுது பார். இந்த குளத்துல இருந்து தான் இந்த வயலுக்கு எல்லாம் நீர்வரத்தே நடக்கும். மலையை ஒட்டி நீர்நிலை இருக்கிறதால எப்பவும் நீர் வற்றாம குளம் நிரம்பியே தான் இருக்கும். அதுனால விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தண்ணீர் கிடைக்கும்."

"உங்க ஊர் போல ஒரு வாய் தண்ணிக்கு பத்து ரூபாய் எல்லாம் வாங்க மாட்டாங்க இங்க . விவசாய பூமியை எல்லாம் பிளாட் போட்டு யாரும் விற்க முடியாது. அதுனால் தான் எங்க ஊர் எப்பவும் பசுமையா இயற்கையோட செழிப்பாவே இருக்கும்."
வழி நெடுக்கிலும் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி காட்டி அதற்கு எல்லாவற்றிற்கும் ஒரு விளக்கமும் கொடுத்து கொண்டே பல்லவியை அழைத்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் துரை பாண்டி. பயந்த விழியோடு வந்தாலும் பாண்டி சுட்டி காட்டிய இடங்களை பார்த்தவாறு தான் வந்து கொண்டிருந்தாள் பல்லவி.
அவளை நார்மல் ஆக்கவென்றே பாண்டியும் விடாமல் பேசி கொண்டே இருந்தார்.
முன்னால் வந்த குளத்தை தாண்டியதும்.
"இதுக்க அந்த புறத்துல இருந்து நம்ம கிராமம் தொடங்குது. பல்லவி. இந்த குளத்துல தாமரை பூவா நிறைஞ்சி கிடக்கிறதால நம்ம ஊர் பெயரும் தாமரைகுளம்னு வச்சிட்டாங்கனு நினைக்கிறேன். இந்த வளைவு திரும்புனாலே வீடுகள் தெரிய ஆரம்பிச்சிடும்."

பாண்டி சொல்லும் போதே வளைவு வந்து விட, அந்த ஒற்றையடி பாதையில் நடந்து வளைவை திரும்பியதும் முதல் முதலாக அந்த கோவில் கண்ணில் விழுந்தது.
"அது சிவன் கோவில் பல்லவி. இது தான் ஊர் பொது கோவில். ஆனா இது மட்டும் கோவில் இல்ல. ஊர்ல்ல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோவில் இருக்கும். எப்பவுமே ஏதோ ஒரு கோவில்ல திருவிழா நடந்துட்டே தான் இருக்கும். அன்னதானமும், பாட்டுமா களை கட்டிட்டே தான் இருக்கும். கூத்தும் ,கும்மாளமுமா அது கூட நல்லா தான் இருக்கும். அடுத்த வாரம் வடக்கு தெருவுல இசக்கி அம்மன் கோவில் திருவிழா இருக்கு .உன்னை நான் அங்க கூட்டிட்டு போறேன். நீ இதுவரை இப்படியெல்லாம் பார்த்திருக்கவே மாட்டா. அவ்வளவு சந்தோஷமாயிருக்கும்."

பாண்டி உற்சாகத்தில் சொல்லி கொண்டே போனாலும் பல்லவியால் அது எதையும் அவ்வளவு சந்தோஷமாக உள்வாங்கி கொள்ள முடியவில்லை. ஏதோ மந்தமான ஒரு உணர்வோடு அவன் சொல்லியதை கேட்டு கொண்டே போக...
" பல்லவி... இதுதான் ஸ்கூலுக்கு போக கூடிய வழி. அந்த ரோடு வழியா போனா சின்ன ஸ்கூலுக்கு போலாம். இந்த வழியா போனா பெரிய ஸ்கூலுக்கு போலாம்."
பாண்டி அப்படி சொன்னதும் சட்டென திரும்பிய கண்கள் ஒருமுறை அந்த சாலையை பார்த்துக் கொண்டன. என்றாலும் இனி நமக்கு படிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்னை இவர் பள்ளிக்கு அனுப்புவாரா? என்ற தவிப்பு மேலோங்க தாபத்தோடு அவரை பார்த்தாள்.
ஆனால் பாண்டியோ...
"இதுதான் எங்க ஊர் சைக்கிள் கடை. இந்த ஊர்ல்ல இருந்து யார் வெளியூர் போக வேண்டும் என்றாலும் இந்த கடையில இருந்து சைக்கிள் வாடகைக்கு எடுத்துட்டு தான் கிளம்புவாங்க. நாம பஸ்ஸை விட்டு இறங்குனோமே, அதுவரை சைக்கிள்ல்ல போயிட்டு அப்புறம் பஸ்ல டவுனுக்கு போகிறவங்க எல்லாருக்கும் தண்டபாணி சைக்கிள் கடை தான் பெரிய உதவியா இருக்கும்."
"தண்டபாணி ரொம்ப தங்கமான மனுஷர். அதிகமா வாடகை எல்லாம் வசூலிக்க மாட்டார். ஆனா அங்க சங்கிலினு ஒருத்தன் வேலைப் பாக்குறான். அவன் பெரிய வல்லுரு. அவனை யாரும் ஏமாத்தவே முடியாது. ஒரு நாள் பிந்தி கொண்டு சைக்கிளை கொடுத்தாலே இரண்டு வாடகை வாங்காம விடமாட்டான்."

"வேலையில் தான் கெடுபிடி. மற்றபடி பாசமா தான் பழகுவான். ஆனா அவனை வம்புக்கு இழுத்தா யார் எவர்ணு எல்லாம் பார்க்க மாட்டான். அடிச்சி சாய்ச்சிடுவான். எவனையும் மதிக்கவும் மாட்டான். எவனுக்கும் ஐந்து பைசா ஈயவும் மாட்டான். சுத்த கஞ்சன். காசு கொடுத்தா எந்த வேலையும் யாருக்கும் செய்து கொடுப்பான்."
"ஏன்னா?... அவன் ஒரு அனாதை. படிப்பறிவு என்பது சுத்தமா கிடையாது. அதனால நாகரீகத்தையும் அவனுட்ட எதிர்பார்க்க முடியாது. நாகரீகமான பேச்சையும் அவன் வாயிலிருந்து எதிர்பார்க்க முடியாது. யாரும் இல்லாததுனால தண்டபாணி தான் வேலையும் கொடுத்து சாப்பாடும் கொடுக்கிறாரு. அதனால பயபுள்ள அவருக்கு மட்டும் விசுவாசமா இருக்கணம்ணு தீயா நிப்பான்."

"அவருக்கு மட்டுமல்ல ஊர்ல்ல பலருக்கும் நிறைய உதவி செய்வான். எனக்கு கூட நிறைய உதவி பண்ணியிருக்கான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு சம்பளம் வச்சிக்குவான். அதை கொடுத்துட்டோம் நம்ம வேலை முடிஞ்சிடும்னு நம்பி போலாம். அப்படி வாக்கு கொடுத்தா கண்டிப்பா செஞ்சி கொடுத்திடுவான்."
பாண்டி சொல்லும் போதே அந்த சைக்கிள் கடை வந்து விட பல்லவி ஒருமுறை திரும்பி பார்த்தாள். நிறைய சைக்கிள் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் சொன்ன தண்டபாணியோ சங்கிலியோ யாருமில்லை.
ஆனால் அது பற்றி கேட்க அவளுக்கு தோன்றவுமில்லை. மெல்ல அடுத்த இடம் தாவிய பாண்டியோ ...
" இதுதாம்மா முட்டாய் பாட்டியோட கடை. கிராமத்துல உன்னை போல உள்ள மொத்த வாண்டுகளும் எந்நேரமும் கூடி இருக்கிற ஒரே இடம் இந்த பாட்டியோட கடை தான். பாட்டி சும்மா கிடைக்கிற பொருளை எல்லாம் எதுவோ பண்ணி ருசியாக்கி வித்து காசு பாக்குறா? அவா ஒரு நெல்லிகாயில்ல உப்பு மிளகு போட்டாலே எல்லா வாண்டுகளுக்கும் பிடிக்கும் மர்மம் தான் இன்னும் புரியல..."

அவர் சொல்லி கொண்டிருக்க பல்லவியின் பார்வை அந்த கடையின் மீது விழுந்தது. இந்த மாமா சொல்வது போல் ஒரு பாட்டி அதிலும் ரவிக்கையின்றி காதில் பாம்படம் போட்ட வயோதிக பாட்டி ஒருத்தர் இருப்பது தெரிந்தது. அவரின் முன்னால் மூக்கை வடித்து கொண்டு வெற்று வயிற்றை காட்டிக் கொண்டு மூணு பொடி பசங்கள் நிற்பதும் தெரிந்தது.
அதை பார்த்து கொண்டே பல்லவி நடக்க சட்டென நின்ற பாண்டியோ அவள் முன் குத்துகால் போட்டு அமர்ந்தவாறு கனிவான பார்வையோடு ...
"நான் பஸ்ல்ல வச்சி சொன்னது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கு தானே பல்லவி."
குரலை தாழ்த்தி முகத்தில் வலியை படரவிட்டவாறு அவர் கேட்க...
" ம்... ம்... ம்..."
என்றாளே தவிர வேறு பேச வாய் வராமல் தொண்டை குழி அடைக்க, குபுகுபுவென பாய்ந்து விட துடித்த நீரை மிக கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு அவள் பரிதாபமாக அவரை பார்க்க...

"உன் அத்தைகாரி கொஞ்சம் வாயாடி தான். மனசுலபட்டதை பட்டுபட்டுணு பேசிடுவா. முன்னால நிக்குறவங்களுக்கு வலிக்குமேணு அவா எப்பவும் யோசிக்க மாட்டா. சும்மா தெருவுல போற பசங்களையே அவா விடமாட்டா. அப்படியிருக்க..."
".........."
" உன்னை கூட்டிட்டு போறேன். அதுவும் அவளுக்கு வேண்டாத குடும்பத்துல இருந்து ஒருத்தியை. சும்மா விடுவாளா? எப்படியும் பொரிஞ்சு தான் தள்ளுவா . நீ தான் கொஞ்சம் பொறுத்து போகணும் கண்ணு. அவா சொல்லுற எதையும் காதுல வாங்கிக்காம அமைதியா இருந்திடு. என்னை போய் இப்படி பேசிட்டாங்களேனு மனசுல ஏத்திட்டு ரோசப்பட்டு எந்த காரணம் கொண்டும் வெளியில போக கூடாது சரியாடா."
"ம்...ம்..."
"மாமா இருக்கேன். எப்பவும் இருப்பேன். அவளோட வாயை எல்லாம் என்னால கண்ரோல் பண்ண முடியாவிட்டாலும் உனக்கு பாதுகாப்பையும், படிப்பையும் மாமா நிச்சயமா தருவேன். என் புள்ளைங்களை படிக்க வைக்கிற அதே ஸ்கூல்ல எப்பாடுபட்டாவது உன்னையும் சேர்த்து விட்டு விடுவேன்."
" நீ எப்படியாவது படிச்சி உன் எதிர்காலத்தை பார்த்ததுக்கு அப்புறமா இந்த வீட்டுல இருந்து போ. அதுவரை இங்க என்ன நடந்தாலும் நீ இந்த வீட்டை விட்டு வெளியில போக மட்டும் நினைக்கவே கூடாது. சரியா?"
என்றவாறு வேதனையோடு பாண்டி அவளை பார்க்க...

அவளால் என்ன சொல்ல முடியும். இவர் சொல்லும் பாதுகாப்பையும், படிப்பையுமே கொடுக்க யாரும் இல்லாதிருக்கும் போது இதையாவது கொடுக்கிறேன் என்கிறாரே...
என மனதுக்குள் நினைத்தவள்.
. "ம்...ம்..."
என்றாள் அமைதியாக.
"சரி... வா போகலாம். "
என வீட்டில் நடக்க போகும் யுத்தத்தை எப்படி எதிர் கொள்வது என கலக்கமாக பாண்டி பல்லவியின் கரம் பற்றி கொண்டு முன்னோக்கி நகர்ந்த,
அதே நேரம்...
மூன்று ஏக்கர் நிலத்தில் உள் வாங்கி இருந்த அந்த பந்தடிகளத்தில் தன் கூர்மையான கண்ணால் தன் நடுவிரலை கழச்சியின் மேல் பதித்து கொண்டு முன்னால் தூரத்தில் தெரிந்த செழியனின் கழச்சியை அடிச்சி தூக்க குறி பார்த்து கொண்டே இருந்தான் சங்கிலி.

கூட்டத்தில் நின்ற அத்தனை கண்களும் அந்த கழச்சியிலே தான் இருந்தது. இதை மட்டும் அடித்து தூக்கி விட்டால் சங்கிலி வின்னாகி விடுவான். அது மட்டுமா?... கூட்டத்தில் நின்ற அனைவரும் அவனுக்கு இரண்டு ரூபாய் வைத்து பந்தய பணத்தை கொடுத்தே ஆக வேண்டும்.
செழியனின் கைகள் அவன் பாக்கெட்டை கட்டியாக பிடித்து கொண்டன.
"இல்ல. அவன் அடிச்சிட கூடாது. நான் இந்த பணத்தை இழந்திட கூடாது. முட்டாய் கடையில பாட்டியோட அல்வா வாங்கி சாப்பிட வேணும் என்கிற ஆசையில அம்மாட்ட இருந்து அடி போட்டு வாங்கின பணம். இதை நான் அவனுட்ட தொலைச்சிட கூடாது."
எண்ணியவன் தன் பாக்கெட்டை அழுத்தி பிடித்து கொண்ட நேரம்.

சங்கிலியின் குறி முன்னால் இருந்த கழச்சியின் மேலே இருந்தது. அவனின் அடையாளமான கழுத்து சங்கிலி அவன் ஆடாமலே வெளிவந்து ஊஞ்சல் போல ஆடி நின்றது. சங்கிலியின் ஸ்டைலே அந்த சங்கிலி தான். சைக்கிள் சங்கிலி போல மாடல் கொண்ட வெள்ளி சங்கிலி அது. ஒவ்வொரு முறையும் அதை பிடித்து ஆட்டி விட்டு சிரிப்பது தான் அவன் ஸ்டைல்.
ஆனால் இன்று அது அவன் ஆட்டாமலே அவன் கழுத்தில் கிடந்து ஆட, அவன் காதோரமாய் வியர்வை வழிந்தோட, முன்னால் இருந்த கழச்சியை கண நேரத்தில் அடித்து தூக்கினான் சங்கிலி.

சங்கிலி அடித்து தூக்கிய மறுகணமே தன் பாக்கெட்டை பிடித்து கொண்டு செழியன் ஒட அவனை துரத்தி வந்தான் சங்கிலி.
"வேணாம்டா. இது அம்மா மிட்டாய் பாட்டி கடையில இருந்து அல்வா வாங்கிக்க கொடுத்தது. தங்கச்சி ஐஸ்சு கூட தனக்கு பங்கு கொண்டு வரணம்ணு சொல்லி விட்டா. இப்ப நான் இதை கொடுத்தா தங்கச்சி அழும்டா."
செழியன் தூரமாய் நின்று கத்த...
"இது பந்தயம் வைக்கிறதுக்கு முன்னால தெரிஞ்சிருக்கணும். உன் தங்கச்சி அழுவுமோ, உன் அம்மா அடிக்குமோ தெரியாது. எனக்கு என் பணம் வேணும்."
சங்கிலி சொன்ன நிலையிலே நிற்க, பணத்தை காப்பாற்றி கொள்ள செழியன் ஒட ஆரம்பித்தான். ஒடி ஒடி ஒரு கட்டத்தில் சோர்ந்தவன் இதற்கு மேல் ஒட முடியாது என தோன்ற தன் முட்டில் கால் ஊன்றி மூச்சை விட்டு கொண்டு நின்ற..
.
அதே நேரம்...
சாலையில் தன் தந்தை ஒரு பெண்ணின் கையை பிடித்து கொண்டு வருவதை பார்த்தவன் குழப்பத்தோடு புது பெண்ணை வியப்போடு பார்க்க...
பின்னால் ஒடி வந்த சங்கிலி அவனை கட்டியாக பிடித்து தூக்கி சுற்றினான்.
"விடுடா. விடு. பணம் தானே வேணும். நானே தந்திடுறேன்."
என செழியன் கத்த ஆரம்பிக்க...
"அது! அந்த பயம் இருக்கட்டும்."
என அவனை சங்கிலி கீழே இறக்கி விட, அதே நேரம் சங்கிலியின் பார்வையிலும் விழுந்தாள் பல்லவி. அவளின் துருதுரு கன்னங்களும் படபடத்த மான் விழியையும் பார்த்தவன் சோகமே உரித்தான அந்த முகத்தில் சரணடைந்தவன் போல அப்படியே நிற்க...

"இந்தா எனக்கான பந்தய பணம். என்னை விடு. என் அப்பா வந்துட்டாங்க. நான் போறேன்."
என்றவன் சங்கிலியின் கையில் இருந்து திமிறிக் கொண்டு ஒட, தன் கழுத்து சங்கிலியை பிடித்து ஆட்டிக் கொண்டு ஸ்டைலாக நடந்து அவர்களை பின் தொடர ஆரம்பித்தான்.
அதே நேரம்...
வீட்டு வாசலில் வந்து நின்ற ஐஸ்வரியாவோ, தந்தை ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வருவதை பார்த்ததும் தன் தாயிடம் சேதி சொல்ல உள்ளே ஓடினாள்.
"இதுதான் கண்ணு நம்ம வீடு."
பாண்டி சொல்லவும் பல்லவி நிமிர்ந்து பார்த்தாள். அது வீடு அல்ல. ஒரு குடிசை. நான்கு குடிசையை ஒன்றாக இணைத்தது போல் இருந்தது அந்த மண்வீடு. தரையை கூட சாணி வைத்து தான் மொழுகியிருந்தார்கள். பல்லவி வாடகை வீட்டில் இருந்தாலும் அடுக்கு மாடி குடியிருப்பில் கல்பனா அவளை நன்றாக தான் வாழ வைத்திருந்தாள். வாழ்வில் புத்தகத்தில் தான் அவள் இப்படியான குடிசை வீட்டை பார்த்திருக்கிறாள். முதன்முதலாக நேரில் பார்க்கிறாள்.

பார்வையால் அந்த வீட்டை மேய்ந்தவாறு தயங்கி தயங்கி அவள் வந்து கொண்டிருக்க, உள்ளே ஐஸ்வர்யா சொன்னதை கேட்டதும் கமலா தன் முந்தாணை ஒரத்தை தூக்கி உதறி இடுப்பில் சொருகியவாறே பிரிந்து கிடந்த தன் தலைமுடியை தூக்கி கட்டியவாறு ஆவேசமாக வெளிவந்தாள்.

அத்தியாயம் தொடரும்...
 
  • Like
Reactions: mythili