அத்தியாயம் - 2

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
அத்தியாயம் - 2
பத்ரகாளி போல் வெளிவந்த அத்தையை பார்த்ததுமே சர்வமும் ஒடுங்கிவிட்டது பல்லவிக்கு. மாமா சொல்லி தான் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் அதட்டி கூட பேசாத தாயிடம் வளர்ந்தவள் இப்படி ஒரு அவதாரத்தை பார்த்ததும் பயத்தில் கலங்கி தான் போனாள். அவள் பெரும்பாடுபட்டு அடக்க பார்த்தும் கண்ணீர் வெளி வருவதை அவளால் நிறுத்தவே முடியவில்லை.
மனைவி பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படி அழும் அவளை பரிதாபமாக பார்த்தார் பாண்டி. மெல்ல தன்னோடு அணைத்தவர்.
"இல்ல கமலம். கல்பனாவை தவிர பல்லவிக்கு யாரும் இல்ல. நிற்கதியா நின்னுச்சு. பாத்திட்டு அம்போணு விட்டுட்டு வர மனசு வரல அதான்."
பாண்டி இழுவையாக பேச்சை நிறுத்த,
"அதுக்கு! பெரிய அன்னைதெரசாவா மாறி அழைச்சிட்டு வந்துட்டீராக்கும்..."
"இல்ல கமலம். அது...“
அவர் மறுபடியும்இழுக்க...
"வாயில இருந்து எதையும் கேட்டிடாதேயும். பேசாம வந்த வண்டியை மறுபடியும் பிடிச்சி இந்த பொட்ட கழுதையை எங்க இருந்து இழுத்துட்டு வந்தீங்களோ அங்க கொண்டு விட்டுட்டு வறீங்க. இல்ல நீரும் உள்ளால வராதேயும்."
சொல்லியவாறு கமலம் வெடுக்கென திரும்பி உள்ளே செல்ல, தயங்கி தயங்கி நின்ற பாண்டியோ எதையோ யோசித்தவாறு உள்ளே ஏற முயல ,
"நில்லுமய்யா.அவளை கொண்டு விடாம உள்ளால காலடி எடுத்து வச்சீரு.இப்ப பார்த்த மாதிரியில்ல. இந்த கமலத்தோட பத்ரகாளி ஆட்டத்தை தான் பாப்பீங்க. இருக்கும் போது இவளோட பாட்டி சின்ன துடியா துடிச்சா.அவா துடிச்ச துடிப்புக்கு தான் அவளோட பேரபுள்ளை அனுபவிச்சி தொலைக்கிது. அதுக்கு நாம என்ன பண்ண முடியும்."
"பேசாம கொண்டு விட்டுட்டு வருகிற வழியை பாரும். பேசி என்னை சம்மதிக்க வச்சிடலாம்ணு தப்பு கணக்கு போட்டா. அது எனட்ட நடக்கவே நடக்காது சொல்லிபுட்டேன்."
கமலம் கட்டன் ரைட்டாக பேச , சிறிது தயங்கிய பாண்டி...
"அது இல்ல கமலம். இப்ப இவளை கூட்டிட்டு போய் எங்க கொண்டு விடுவேன். அவளுக்கு தான் யாரும் இல்லையே. இருந்திருந்தா நாம இருக்கிற கஷ்டத்துக்கு இப்படி கூட்டிட்டு வருவேனா?..."
பாண்டி இறங்கி வந்து பேச...
"யாருமில்லணா என்ன அவளோட வீட்டுல கொண்டு விட்டுட்டு வாய்யா. அவா எப்படி புழைச்சா நமக்கென்ன?"
கமலமும் சுருதி குறையாமல் அப்படியே பேச...
"அப்படி இருந்தா விட்டுட்டு வர மாட்டேனா?. அவளுக்கு அதுவும் இல்ல. கல்பனா ஆபிஸ்ல்ல ஒர்க் பண்ணிட்டு வாடகை வீட்டுல தான் வாழ்ந்துட்டிருந்திருக்கா. அவா இறந்ததும் அந்த வீட்டுகார அம்மா புள்ளைய கிளம்ப சொல்லிட்டாங்க. பாவம் பச்சபுள்ள எங்க போகும் அதுவும் பொட்ட புள்ள. அதான் எதையும் யோசிக்காம கூட்டிட்டு வந்தேன்."
"ஆமா...பெத்த மூணுக்குமே ஆக்கி போட வக்கில்ல. இந்த லட்சணத்துல தெருவுல போற நாயையும் கூட்டிட்டு வந்து சோறு போட்டா விளங்கிடும்."
கமலத்தின் வார்த்தை பல்லவியை கடுமையாக வலிக்க செய்ய பல்லவி தாங்க முடியாமல் குலுங்கினாள். பல்லவியின் வலி புரிந்தாலும் இப்போது கோபப்பட்டு பேசுவது பல்லவியின் எதிர்காலத்தை தான் சிதைக்கும் என உணர்ந்த பாண்டி சிவ்வென்று ஏறிய கோபத்தை சிரமப்பட்டு நார்மலாக்கி, ஒரு கனைப்போடு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு...
"மூணு வேளை என்ன நாமளா சாப்பாடு போடபோறோம். அதுக்கு தான் அவள் வீட்டு ரேஷன் கார்டு இருக்கே. அது போதாதா?..."
"போதும்ய்யா. ஒரு பொட்ட புள்ளையை வளர்க்க அது போதும். கட்டிக்க கோமணமே இல்லாதவன் எல்லாம் அடுத்தவன் வேஷ்டி கட்டிக்கலணு கவலைப்பட்டானாம். இந்த லட்சணமாலியா இருக்கு உன் புழைப்பு. நீ விறகு ஒடிச்சி அதை ஹோட்டல் ஹோட்டலா போய் வித்து வருகிற பணத்துல. நம்ம வீட்டுல இருக்கிறவங்க வயித்தை கழுவவே வக்கில்ல. இந்த லட்சணத்துல..."
கமலம் கொதிநிலையின் உச்சத்தில் சொல்ல... அதன் பிறகு அவள் வாயிலிருந்து வந்த அசிங்கமான வார்த்தைகளை எல்லாம் வார்த்தையில் கோர்க்க முடியாததாய் இருந்தது. அந்த வார்த்தையில் பல்லவி மொத்தமாய் நொருங்கி விட்டாள்.
"பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாமோ". மாமாவோட வந்து அவருக்கும் நிம்மதி இல்லாமல் பண்ணி விட்டேனோ? ஏம்மா... ஏம்மா... என்னை விட்டுட்டு போனா. ஏம்மா என்னையும் உன்னோட அழைச்சிட்டு போயிருக்கலாமேம்மா. பாரு... உன் புள்ளையை என்ன எல்லாம் பேசுறாங்கணு."
"நீ என்கூட இருந்தா இதை எல்லாம் கேட்க வேண்டி வந்திருக்காதேம்மா. என்னை எப்படியெல்லாம் பாத்துகிட்டா.நான் உன் இளவரசிணு சொல்லுவியேம்மா. உன் இளவரசியை இங்க பாரும்மா நாய்ணு சொல்லுறாங்க. நான் நீ செத்ததுமே நாயாயிட்டேனாம்மா?"
எண்ணும் போதே தாங்க முடியா வலி வர பல்லவி குலுங்கி குலுங்கி அழுதாள். அப்போதும் பாண்டிக்கும் கமலத்திற்கும் சண்டை ஒயவில்லை. அவரும் எவ்வளவு நேரம் அமைதியாக பேசுவார். கமலத்தின் ஓவர் வெடியால் பாண்டியும் வெடிக்கத் தொடங்கிவிட்டார். இவர்கள் சத்தம் கேட்டு எதிர் வீடு பக்கத்து வீடு என கூடிவிட பல்லவிக்கு அவமானமாக போய்விட்டது.
காட்சி பொருள் போல எல்லார் முன்னாலும் கலங்கி நிற்பது கொடுமையாக இருந்தது. அவள் வலியில் கூனி குறுகி நிற்பதை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தான் சங்கிலி. ஏனோ அவனை அறியாமல் அவன் கண்களும் கலங்கி விட, தன் சோல்டரால் கண்ணீரை துடைத்தவன் பல்லவியை பரிதாபமாக பார்த்தான்.
ஆனாலும் அவனுக்கு ஏன் என்று தெரியவில்லை. "ஏன் அந்த பெண் கலங்கினால் தன் கண்ணும் கலங்குகிறது. ஏன் ஒடி சென்று அவளை கட்டி அணைத்து... "கலங்காத நான் இருக்கேணு..." சொல்லிவிட மனது துடிக்கிது. அவளை அழ வைக்க கூடிய அந்த பொம்பளை கன்னத்துல பளார் பளார்ணு ஏன் அறைய தோணுது."
"தெரியல... தெரியல. ஏணு தெரியல. ஆனா உண்மையிலே தோணுது." சங்கிலி இப்படி அடுத்தவருக்காக இரக்கப்படும் ரகம் இல்லை. யாரின் வலியையும் உணர்ந்து அவர்களுக்காக எதையும் செய்யும் ரகமுமில்லை. யார் கஷ்டத்திலும் கூட நிற்க வேண்டும் என்று கூட அவன் நினைத்தது இல்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் காசு.
காசு சேர்க்க வேண்டும். அதற்காக யார் என்ன சொன்னாலும் செய்வான்.
ஆனால் அந்த காசை கொடுக்க தவறினால் சிங்கமாய் அவர்கள் மேல் பாயத் தொடங்கி விடுவான். அதை தவிர அவன் உள்ளத்துள் பாசமோ,நேசமோ, சுரந்ததேயில்லை. ஆனால் இன்று சுரக்கிறது. அதுவும் முன்பின் தெரியாத இதுவரை பழக்கமில்லாத... அந்த பெண்ணின் மீது சுரக்கிறது. அதுவும் தன் வயதை விட மூன்று வயது சின்ன பெண்ணின் மீது சுரக்கிறது.
பல்லை கடித்தும் ,புஸ்டியை முறுக்கியும் அவன் கோபத்தை வெளிகாட்டி கொண்டு கூட்டத்துக்குள் கூட்டமாய் அவனும் நின்றுகொண்டிருக்க, அங்கே சண்டை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. கமலத்தின் வாய் தெரிந்ததால் யாரும் பக்கத்தில் கூட போகவில்லை. ஆனால் ஒரு மாதமாய் மென்று துப்ப நல்ல ஒரு செய்தி கிடைத்த சந்தோஷத்தில் வம்பழக்க தொடங்கினர்.
"என்ன கனகம் இவங்க சண்டை இண்ணைக்கெல்லாம் ஒயாது போல தெரியுது. கமலம் உன் பிரண்ட் தானே கொஞ்சம் சொல்லுறது..."
"என்னத்த சொல்ல..."
அவளும் தாளத்தோடு கேட்க...
"கூட்டிட்டு வந்ததே வந்தாச்சு. உள்ளால கூட்டிட்டு போறது தானே சரி."
"ம்..ம். உன் புருஷன் இப்படி ஒரு புள்ளையை கூட்டிட்டு வந்தா கமுக்கமா உள்ளால கூட்டிட்டு போயிடுவியா நீ..."
கனகம் தோழிக்கு சப்போட்டாக களம் இறங்க…
"அது... அது... எப்படி?"
"அப்படினா பொத்திட்டு வேடிக்கை பாரு. தள்ளை இறந்தா வேற போக்கிடமா இருக்காது. இவர் துக்க வீட்டுக்கு போனா துக்கம் விசாரிச்சிட்டு தானே வரணும். கூடவே தலைவலியையும் சுமந்துட்டு வந்தா..."
"ஆமா... உண்மையிலே இது உறவு பொண்ணா?... இல்ல... இவர்!.."
கூட நின்றவள் பொடி வைத்து கேட்க...
"என்னடி சொல்லுறா?..."
காதை கூர்மையாக்கிஅவளும் கேட்க...
"இல்லடி...தள்ளை செத்து போயிட்டாணு சொல்லுறாங்க. அப்ப தகப்பன் எங்க. அதை சொல்லணம்ல்யா.ஆனா பாண்டி அண்ணன் வாயிலயிருந்து அது வருதா பாரு. எனக்கென்னமோ சந்தேகமா தான் இருக்குது. இவ்வளவு உருத்தா கூட்டிட்டு வந்திருக்கார்ணா விசயம் என்னமோ இருக்கு."
ராணி மென்குரலில் சொல்ல,
"ஆஹா... அப்படியும் இருக்குமா?..."
கனகம் ஆச்சரியம் மின்ன வாயில் கை வைத்து கேட்க,
"இந்த காலத்துல எவனையும் நம்ப முடியாது கனகம். மேல தெரு ராக்காயி புருஷனை பாத்தியா. அடிக்கடி டவுனுக்கு வேலை தேடி போறேணு புறப்பட்டு வெள்ளையும் சொள்ளையுமா போனான். கடைசியா மொத்தமா அங்க, கூடவேலை பார்த்த எவளையோ இழுத்துட்டு ஒடிட்டான். நம்ம கமலம் புருஷனும் ஊர்ல்ல வெள்ளையும் சொள்ளையுமா அலைய கூடிய ஆளு. படிப்பு கூட உண்டுணு தான் பேசிக்கிறாங்க."
"இதுல வேற கமலம் ஒரு நாள் அதை அன்பா நடத்துனது இல்லை. எப்பவும் பணம் காய்க்கிற மிஷினா தான் பாக்கும். அதான் எங்கேயோ பாசம் கிடைச்சா. ஆண் மனசு அலைபாய தானே செய்யும். அப்படி அலை பாய்ஞ்சிடுச்சிணு தான் நினைக்கிறேன்."
ராணி மென்குரலில் கனகத்தின் காதை கடிக்க..
"இருக்கும்… இருக்கும்.இல்லனா எப்பவாவது மனுஷர் நம்ம கமலத்துட்ட இவ்வளவு மல்லுகட்டி நின்னிருப்பாரா?... பாரு. எவ்வளவு தைரியமா அவா முன்னாலயே குரல் உசத்தி பேசுறாரு."
ஊர் வாய் வேறு விதமாய் மெல்ல...மெல்ல விசயம் ஊர் முழுவதும் பரவி ஒய்ந்த நேரம்.
"நீ வா புள்ள. இவா என்ன பண்ணுறாணு நானும் பாக்குறேன். கட்டினவன் இவ்வளவு சொல்லுறேன். கொஞ்சம் கூட இறங்கி வராட்டா.நான் மட்டும் எதுக்கு அவா பேச்சை கேட்கணும்."
கர்ச்சித்து கொண்டு பாண்டி பல்லவியின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள் செல்ல, பத்ரகாளியாய் முன் வந்து நின்றாள் கமலம்.
"வழியை விடு…"
"விட முடியாது. என்னைய்யா பண்ணுவா?"
அவளும் வெடுக்கென கேட்க…ஊரே வேடிக்கை பார்க்கிறது என்ற கோபத்தில் இருந்த பாண்டியின் கரம் முதன் முறையாக அவள் கன்னத்தை பதம் பார்த்தது. முதல் அடி கன்னத்தில் விழுந்ததும் இதுவரை ஒயாமல் பேசி கொண்டிருந்த கமலத்தின் வாய் சட்டென மூடிக் கொள்ள,கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் உருண்டோட கமலத்தை தாண்டி பல்லவியோடு உள்ளே வந்தான் பாண்டி.
பாண்டியின் கையில் தன் கை மாட்டி கொள்ள அவன் இழுப்புக்கெல்லாம் போயே ஆகவேண்டிய நிலையில் பல்லவி உள்வந்து விட்டாலும், பயத்தில் உடல் எல்லாம் நடுங்கி கொண்டு தான் இருந்தது. உதடு விம்மலோடு கண்ணீர் நிற்காமல் பாய்ந்து கொண்டு தான் இருந்தது.அவளை பிடித்து ஒரு மர பெஞ்சில் இருத்தியவர்.
"நீ இதுல இரும்மா. அவா என்ன பண்ணுறாணு நானும் பாக்குறேன்."
கர்வி கொண்டு அவர் சொன்னாலும் மனது புண்ணாக தான் வலித்தது. கண்டிப்பாய் போனவுடனே பல்லவியை உள்ளே அனுமதிக்க மாட்டாள். காச்மூச்சென்று கத்த தான் செய்வாள். ஆனால் ஒரு கட்டத்தில் எப்படியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று தான் நம்பினார். ஆனால் பிடிவாதத்தின் உச்சத்தில் அவள் நின்ற போது வேறு வழியில்லாமல் தான் அடித்து விட்டார்.
ஆனால் அவளுடன் இணைந்து பதினெட்டு வருடம் ஆகிறது. அவள் இந்த பதினெட்டு வருடத்தில் எப்படி எல்லாமோ நடத்தியிருக்கிறாள். வாய் ஒயாமல் பேசியிருக்கிறாள். ஆனால் அப்போது எல்லாம் கை நீட்டாத அவன் இன்று கொதித்து போய் கை நீட்டிவிட்டார். காரணம் பல்லவி தான். இன்று மட்டும் அவர் அடங்கிபோனால் அவரை நம்பி ஒற்றை வார்த்தை பேசாமல் அவர் விரல் பிடித்து வந்த பல்லவியின் வாழ்வு சீரழிந்து விடுமே. இன்றோ நாளையோ பெரிய பொண்ணாக உருமாற போகும் நிலையில் இருக்கும் அவளை நிற்கதியாய் நிற்க வைத்தால் அந்த பாவம் தன்னை சும்மா விடுமா?
அல்லது அப்படி விட்டால் அவள் வாழ்வு தான் நன்றாக அமையுமா? ஏதோ கொடியவன் கையில் அகப்பட்டு சீரழிந்து போகாது. அதனால் தான் கொதித்து விட்டார். அவர் கொதித்ததின் வெளிபாடு அன்று முழுவதும் யாரும் எதுவும் சாப்பிடாத நிலைக்கு கொண்டு போனது. வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. ஒரு மூலையில் சுருண்டு கிடந்து விம்மிக் கொண்டிருந்த தாயின் அருகில் வந்து அவர்களின் மூன்று குழந்தைகளும் படுத்து கொள்ள,பல்லவியின் அருகில் பாண்டி படுத்திருந்தார்.
பல்லவி குத்து கால்போட்டு அமர்ந்து கொண்டு அழுதுகொண்டே தான் இருந்தாள். அன்று இரவு எல்லாரும் அதே இடத்திலே தூங்கி விட காலையில் கண் விழித்த பாண்டி எழுந்து வெளியே வந்தான்.
என்றும் போல கமலத்தின் குரல் கேட்கவே இல்லை. கமலம் தினமும் நான்கு மணிக்கே எழுந்து மூன்று பசுமாட்டிற்கு பால் சுரந்து, அதன் இடத்தை சுத்தப்படுத்தி, அதற்கு தீவனம் வைத்து சூரிய கதிர்கள் பூமியை தொடும் முன் வாசல் பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டு சமையலுக்கு தீயை பற்ற வைத்தே விடுவாள்.
ஆனால் இன்று அது எதுவும் நடக்கவில்லை என்பது பார்த்தவுடனே தெரிந்தது. மெல்ல அவள் முடங்கி கொண்ட குடிசையை எட்டி பார்த்தான். மூலையில் சுருண்டபடியே அவள் இருக்க. அவள் மடியில் ஐஸ்வரியா தூங்கி கொண்டிருக்க, செழியனும் ரவியும் கீழே கிடந்தனர். ஒரு நிமிடம் நின்று பார்த்தவர் வெளியேறியிருக்க… அப்போது தான் விழிப்பு வந்தது பல்லவிக்கு. இரவு பல மணி நேரம் தூக்கத்தை தொலைத்ததால் கண் எரிச்சலடைந்தது. கண்ணை கசக்கி கொண்டு பார்த்தவளுக்கு அப்போது தான் தன் வாழ்க்கை சூழல் மொத்தமாக மாறி போய் இருப்பது உறைத்தது.
இதே நேரம் கல்பனா என்றால் தன் மகளை என்றும் காப்பியோடு தான் எழுப்புவாள். அவள் கெஞ்சி… கொஞ்சி… புரண்டு எழும்பவே பத்து நிமிடம் எடுத்து கொண்டு, அவளின் வற்புறுத்தலால் எழுந்தாலும் அவள் மடியில் மறுபடியும் படுத்து கொண்டு அவளை கட்டியாக பிடித்து கொண்டு கெஞ்சி… கொஞ்சி… கூத்தடித்து கொண்டு தான் தினமும் மெத்தையை விட்டு எழும்புவாள்.
இன்று அப்படி கொஞ்ச, அணைக்க யாருமில்லை.ஏன்? காப்பி வேணுமா என்று கேட்க கூட ஆள் இல்லை. காப்பி கிடைக்குமா என்று கூட தெரியவில்லை. சுற்றி பார்வையை செலுத்தினாள். அங்கு யாருமே இல்லை. எழும்ப வேண்டுமா? அப்படி எழும்பினால் எங்கு செல்வது. எதுவும் தெரியவில்லை. பல் துலக்க வேண்டுமே. வெளியில் போனால் என்ன சொல்வார்கள். எண்ணும் போதே நேற்று பத்ரகாளியாய் மாறி நின்ற அத்தைகாரியின் உருவம் நெஞ்சில் வந்து ஆட. மொத்தமாய் தன்னை அந்த மூலையிலே முடக்கி கொண்டாள்.
அதே நேரம் தன் கலர் சொக்காவை எடுத்து அணிந்து கொண்டு சைக்கிள் கடையை விட்டு வெளியேறிய சங்கிலியை வினோதமாக பார்த்தார் தண்டபாணி.
"என்னடா அதிசயமா இருக்கு?.நீ எல்லாம் இவ்வளவு காலையிலேயே எழும்ப மாட்டியே. அதுவே அதிசயம்னா இவ்வளவு காலையில நல்ல துணியை எடுத்து மாட்டிட்டு கிளம்புறது இன்னும் அதிசயம். ஆமா இவ்வளவு காலையில எங்க கிளப்புறா?..."
"என்னண்ணே கிளம்பும்போது இப்படி எங்கணு கேட்கிறது நல்லாவா இருக்கு?."
சங்கிலி கிண்டலோடுசொல்ல…
"என்னடா உன் பேச்சே ஒரு மாதிரி இருக்குது. ஸ்டைல் கூட கொஞ்சம் ஓவரா தெரியுது."
"தெரியும். தெரியும். உங்க பார்வையும், மனசும் கெட்டுபோச்சு. அதான் அப்படி தெரியுது."
சொல்லி கொண்டு இதற்கு மேல் நின்றால் நோண்டி நோண்டி கேட்டு உண்மையை தெரிந்துகொள்வார் என்றே துள்ளலோடு வெளிவந்தான். தன் TVS வண்டியை எடுத்து கொண்டு புயல் வேகத்தில் கிளம்பினான். மனம் வேகம் வேகமாக அடிக்க தொடங்கியது. அந்த புள்ள அந்த வீட்டுல எப்படி இருக்குதோ என்ற பரிதவிப்பு தான் இந்த ஒட்டத்திற்கு காரணம். பாண்டி பல்லவியை வீம்போடு உள்ளே அழைத்து சென்றுவிட… கூட்டம் ஆள் ஆளுக்கு முணு முணுத்து கொண்டே விலக… சங்கிலி தான் என்ன செய்வது என தெரியாமல் பல மணிநேரம் அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்தான்.
ஆனால் அதன்பிறகு அந்த வீட்டில் ஆழ்ந்த அமைதியே தெரிய, உள்ளே என்ன நடக்கிறதோ? என்ற குழப்பத்தோடு தான் சைக்கிள் கடைக்கு வந்தான். ஆனால் என்றும் போல் அவனால் நார்மலாக இருக்க முடியவில்லை. புதுவிதமான உணர்வு. இப்படி ஒரு உணர்வு அவனுக்கு இதுவரை வந்ததேயில்லை. என்னாச்சு என அறிய அவன் மனம் துடித்த துடிப்பை இதுவரை அவன் உணர்ந்ததே இல்லை. இது போல் சண்டைகளை அவன் பார்க்காமல் இல்லை. வீதியில் இரண்டு குடும்பமாவது ஒருநாள் முட்டிகொள்ளும். அப்படியான இடங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. அதன் பின் அது அவன் மனதில் தங்குவதே இல்லை. அப்படி சில விசயம் தங்கினாலும் கேலியும் கிண்டலோடும் தண்டபாணியிடம் சொல்லி சிரிப்பதோடு அது முடிந்துவிடும்.
ஆனால் இன்று பல்லவியின் விசயம் அப்படியில்லை. அவனுள் ஏதோ ஒரு உணர்வை மேலெழ வைத்து விட்டது. அது அவளும் ஒரு அனாதை என்பதால் கூட இருக்கலாம். யாருமில்லாமல் நிற்கதியாய் நிற்கும் பெண் என்பதால் கூட வந்திருக்கலாம். ஆனால் அந்த பாறையில் கூட ஈரம் இருக்கிறது என உணர வைத்தது பல்லவியின் விசயம் தான். இரவு சாப்பிட உட்கார்ந்த போதும் "அவள் சாப்பிட்டிருப்பாளா?..." என்ற எண்ணம் எழ தான் செய்தது. "அந்த ராட்சசி அந்த புள்ளைக்கு பசிக்கு உணவு கொடுத்திருப்பாளா?...எங்க இந்த அளவு கத்திட்டு போனவா எப்படி சாப்பாடு கொடுப்பா…" என்றபோதே ஏனோ உணவு அவனுக்குள்ளும் இறங்க மறுத்தது. தூக்கத்தில் கூட நிச்சயம் அந்த புள்ள இப்ப தூங்கி இருக்காது. அழுதுட்டு தான் இருக்கும்."
"அதே தாயை பறி கொடுத்த வேதனையில இருக்கும். இந்த நேரம் இந்த ராட்சசி பேசிய பேச்சு கொஞ்சமா?... எங்க தூங்க விடும். எப்படியும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு தான் இருக்கும்." இப்படியான எண்ணங்களே சங்கிலியை அன்றைய இரவு தூங்க விடாமல் செய்திருந்தது. அதனால் தான் அதிகாலையிலே ஒரு முறை அவளை பார்த்து விட துடித்த மனதை அடக்க முடியாமல் பாண்டியின் வீட்டை நோக்கி வந்தான்.
வந்தவுடனே தெரிந்து விட்டது. சூழல் நார்மல் ஆகவில்லை என்பது. அப்படி நார்மல் ஆகியிருந்தால் தெருவையே வளைத்து கமலம் போடும் கோலம் இல்லாமல் இருக்காது. அப்படிணா யுத்தம் இப்பவும் தொடருதா?... சங்கிலியின் மனதில் பல பல கேள்விகள் உதயமானது.
"இப்ப அந்த செழியன் மட்டும் வெளியில வர மாட்டானா? இல்ல ரவியாவது வந்திட மாட்டானா?... உண்மையை அவர்களிடமாவது கேட்டு தெரிந்துகொள்ளலாமே?..."
சங்கிலி அந்த வாசலையே பார்த்தவாறு பதைபதைப்போடு நின்று கொண்டிருந்தான். கால் மணிநேரம் யாரும் வரவில்லை. ஆனால் அதே நேரம் உள்ளே…
மாட்டிலிருந்து பால் கறந்து டீ போட்டு எடுத்து கொண்டு பாண்டி முதன்முதலாக மனைவி படுத்திருந்த இடத்திற்கு தான் வந்தான். "எப்படியும் அவளை சமாதானப்படுத்தியே ஆக வேண்டும். எப்பவும் பல்லவியோட கூடவே நாம இருக்க முடியாது. விறகுவெட்ட காட்டுக்கு சென்று தான் ஆகணும். எப்படியும் இவளோட மனசை மாத்துனா தான் எல்லாம் சரியாகும்." என்ற எண்ணத்தில் தான் எழுந்தவுடன் கமலத்தின் வேலையில் சிலவற்றை செய்து பால் எடுத்து காப்பியோடு மனைவியின் அருகில் வந்தான்.
சுற்றி படுத்து கிடந்த குழந்தைகளை எழுப்பியவன்.
"போங்கடா போய் பல் தேய்ச்சிட்டு வாங்க…காப்பி குடிக்கலாம்."
என்றதும் குழந்தைகள் எழுந்துவெளி செல்ல, மனைவியின் அருகில் வந்த பாண்டி.. தூங்காமல் இறுக்கமாக கண்மூடி தூங்குவது போல் கிடந்த மனைவியை பார்த்தான்.
"எழுப்பு கமலம். நேற்றே எதுவும் சாப்பிடல. முதல்ல இந்த காப்பியை குடி.."
பாண்டி இவ்வளவு இறங்கி வந்து பேசியும் அவள் கண்திறக்கவே இல்லை. கல்லாக அப்படியே கிடந்தாள்.
"தப்புதான். உன்னை கை நீட்டி அடிச்சிருக்க கூடாது. ஆத்திரத்துல பண்ணிட்டேன். தப்புதான் என்ன மன்னிச்சிக்க…"
என்ற போதும் கமலம் அசைந்து கொடுக்கவில்லை.அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டு அவள் தலையை தூக்க முயல…
"விடுய்யா… விடு. இதுக்க மேல என்னை நீ தொட்டா…"
கமலம் பெண் சிங்கம்போல் கர்ச்சிக்க…
"தப்பு தாண்டி. தப்பு தான். அதான் மன்னிப்பு கேட்டேனே."
"செய்யுறது எல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பா?"
அவள் கோபத்தில் சாட…
"இப்ப என்ன தாண்டி பண்ண சொல்லுறா?…"
"................"
"நான் அம்புட்டு சொல்லியும் நீ புரியாம நடந்தா.கோபம் வராதா. அந்த கோபத்துல அறைஞ்சிட்டேன்."
"நான் பண்ணுனதுக்கு அறைஞ்சியே. அப்போ நீ பண்ணுனதுக்கு நான் என்ன பண்ணணும். சொல்லுய்யா. எவளோ ஒருத்தி பெத்த பொண்ணுக்காக நீ என்னை அறைஞ்சிட்டால. இனி உனட்ட பேச நான் தயாராயில்ல. போயிடு. உனக்காகவும் உன் பிள்ளைகளுக்காகவும் நான் வாழ்ந்தது போதும். போயிடு. எழும்பி பேசாம போயிடு."
"கோபப்படாதடி. முதல்ல காப்பியை குடி."
அவள் சீற சீற… பாண்டி அடங்கி போயே பேச… ஒரு கட்டத்திற்குமேல் கமலத்தின் சீற்றம் அதிகமாகி அவர் நீட்டிய காப்பியை தட்டி விட்டுவிட, கோபத்தின் எல்லையை தாண்டி விட்ட பாண்டி அவளை முறைத்துவிட்டு வெளியேற…அப்படி கோபத்தோடு வந்த பாண்டியை தான் வெளியில் நின்று இவர்கள் வீட்டையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்த சங்கிலி பார்த்தான்.
அவர் கண்ணில் தெரிந்த ஆத்திரமும் கோபமும் உள்ளே சூழல் மிக மிக மோசமாக தான் இருக்கிறது என்பதை காட்ட சங்கிலியின் மனதோ புழு போல துடிக்க ஆரம்பித்த நேரம். வீட்டில் இருந்து வெளிவந்த பாண்டியோ சாலையோடு வேகமாக நடக்க தொடங்க. அவரை துரத்தி கொண்டே பின்னால் ஓடினான் சங்கிலி.

அத்தியாயம் தொடரும்…