அனுபவ தத்துவம்

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
சிந்தனை களம் 1

வருமானம் அளவில் சிறிதென்றாலும், செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை..

எவ்வளவு சம்பாதித்தாலும், தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கு அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்...

வரவுக்கு மேல் செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவர்...

அமெரிக்க தொழில் அதிபர் ‘ஜான் முர்ரே’ பற்றிக் கேள்விப்பட்ட இருவர், தங்களது சேவை நிறுவனத்திற்காக பண உதவி வேண்டி ஒரு நல்ல தொகையை நன்கொடையாகப் பெற விரும்பி அவரை காணச் சென்றனர்...

வரவேற்பு அறையில் அவரது வருகைக்காகக் காத்து உட்கார்ந்திருந்தனர். ஜான் முர்ரே வந்தார். வந்ததும் அறையில் மேசையின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளைக் கண்டனர்...

எதற்கு இரண்டு?
ஒரு மெழுகுவர்த்தி போதுமே! என்று கூறியவாறே ஒரு மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். வந்த இருவரும் இவ்வளவு சிக்கனமாக இருக்கிறார். இவர் எங்கே பண உதவி செய்யப் போகிறார் என்று மனதிற்குள் நினைத்தவராய் அமர்ந்திருக்க...

*சரி*, நீங்கள் இருவரும் என்ன விஷயமாய் வந்தீர்கள்...? என்று முர்ரே வினவ, இருவரும் நம்பிக்கையற்ற குரலில் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறினார்கள்...

கேட்ட ஜான்முர்ரே ஒரு பெரிய தொகைக்கான காசோலையைக் கொடுக்க இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். வாய்விட்டுக் கேட்டும் விட்டார்கள்...

ஐயா, நீங்கள் வந்ததும் ஒரு மெழுகுவர்த்தியை அணைத்ததைக் கண்டோம், இவ்வளவு சிக்கனமாய் இருப்பவர் எங்கே நமக்குப் பணம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்தோம் என்று கூற..

அதற்கு முர்ரே “நான் இவ்வாறு சிக்கனமாய் இருப்பதால் தான் இந்தத் தொகையை சேமித்து உங்களுக்குத் தர முடிந்தது” என்றார்...

*ஆம் நண்பர்களே...!*

*தனது வருவாய் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி, பின்னால் அதுவும் இல்லாமல் கெட்டுவிடும் என்று சொல்கிறார் அய்யன் வள்ளுவர்...!*

*அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல, இல்லாகித் தோன்றாக் கெடும்* - (குறள்- 479)

" *ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை* " (குறள் - 478)

என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது...

*வருவாய் குறைவாக இருந்தாலும், செலவு மிகாமல் இருந்தால் தவறில்லை என்பது இதன் பொருள். வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்...!!*

*வருமானம் குறைவாக இருப்பவர்கள் தன் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும், எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி, செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.!!!*

*சிலருக்கு வருமானம் அதிகமாகவே வரும். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்தால் கேடுதான் விளையும்...!*