யாருக்கும் சுவடில்லை இங்கு

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
யாருக்கும் சுவடில்லை இங்கு


ஆசிரியர் வாகீஸ்வரி

அத்தியாயம் 1

காசி என நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது முதலில் அங்கே உள்ள
கோவில்களும் கரைபுரண்டு ஓடும் கங்கை நதியும்தான். இங்கே இன்னொரு
சிறப்பும் உள்ளது, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பனாரஸ்
பட்டுச்சேலைகள்தான்.

ஆம் காசிப்பட்டு என்றும் பனாரஸ் பட்டு என்றும் சொல்லப்படும்
இப்புடவைகள் கொஞ்சம் எடையுள்ளதாகவே இருக்கும். நுட்பமான புரோகேட்
ஜரிகை வேலைப்பாடுகள் செய்திருப்பதாலும் சில நேரம் நம் விருப்பத்திற்கு
ஏற்ப தங்கம், வெள்ளி நூலாலும் வேலைப்பாடுகளை செய்து கொடுப்பார்கள்.
காசியின் மென்மையான பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் புத்தர் முதல்
அரசர் வரை இக்காலத்திலும் சிறப்பு வாய்ந்தவையாகவே இருக்கிறது என்பது
பெருமைக்கு உரிய விஷயமாகும்.

அதிகாலை நேரம் பிரம்ம முகூர்த்தம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவாத,
லேசான இருள் விழக ஆரம்பித்திருந்த காலைப்பொழுது அது. ஆதவன்
மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நேரம் ஆதலால் இனி இருள் விலகியே
ஆகவேண்டும் அத்தருணத்தில்.

உடலே உறையும் வண்ணம் சில்லிடும் காற்று மேனியைத் தழுவிப்போக,
அது போதாதெனக் கூடவே பனிப்புகை வேறு சுற்றிலும் பரவியிருந்தது.
எதிரே நிற்பவர் கூடத் தெரியாமல் பனி மூடியிருந்தது.
வாகனங்களில் செல்வோருக்கு அது ஒரு சவாலான பயணமாகவே இருக்கும்
நிச்சயமாக.

கடும் பனியில் உடலை சுற்றியிருக்கும் கம்பளியையும் மீறி குளிர்
சோதித்தாலும். கடுமையான குளிரில் உடல் நடுங்கினாலும், கண் முன்னே
பரந்து விரிந்திருக்கும் அழகிற்கு அது ஈடு இணை இல்லைதான். எப்படிப்பட்ட
குளிராய் இருந்தாலும் அது உறைப்பதே இல்லை அக்கணம்.

ஆம்! கண்ணெதிரே பிரம்மாண்டமாய்ப் பரந்து விரிந்திருக்கும் கங்கை
எத்தனை முறை பார்த்தாலும் நம் கண்களை பிரம்மிக்கச் செய்கின்றது. ஒரு
கரையில் இருந்து பார்க்கையில் அதன் மறுகரை பார்வையில் தட்டுப்படாது.
அத்தனைக்கு அத்தனை அகன்ற நீர் வழித்தடம் கொண்டவள் அவள்.
பனிசூல் காலைப்பொழுதின் நிசப்தத்தில் கம்பீரமாய் ஆர்ப்பரிப்பில்லாது
அமைதியாய் நிற்கிறாள் கங்கை அன்னை.

கம்பராமாயணத்தில் தனியொரு இடம்பெற்றது கங்கை காண் படலம். அதில்
குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர். படகுகள் சூழ் கங்கை என.
அக்காலம் முதல் இன்று வரை அனைத்துப் படித்துறைகளிலும்
நின்றிருக்கிறது, ஒருவர் அல்லது அல்லது சிலர் அமரக்கூடிய சிறு சிறு
படகுகள்.
சிலருக்கு கங்கை நதியில் தியானிக்க விருப்பம் இருப்பின் அதற்கான
வாய்ப்பையும் வழங்குவார்கள் படகோட்டிகள். படகை நடுகங்கையில்
செலுத்தி அசையாமல் நிறுத்திவிடுவார்கள். விரும்பிய நேரம் வரை கங்கை
அன்னையுடன் இருக்கலாம்.

அப்படிப்பட்ட காசி மாநகரில்தான் பனாரஸ் என்றும் வாரணாசி எனவும்
அழைக்கப்படும் நகரம் கங்கை கரையோரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது.
அத்தியாவசிய வீதியில் நானும் அத்தியாவசியமானவன்தான் என்பதுபோல
நின்றிருந்தது அந்தப் பாரம்பரிய இல்லம்.
அந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட பத்துக் குடும்பங்கள் இருப்பார்கள்,
கூட்டுக்குடும்பம். வேதங்களை கரைத்துக் குடித்திருக்கும் மகான்கள் அவர்கள்.

காசியில் ரங்காச்சாரி என்றால் தெரியாதவர்கள் எவருமில்லை. அவரிடம்
எல்லோருக்குமே பயம் கலந்த மரியாதை இருக்கவே செய்யும்.
நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ஒல்லியான உடல்வாகு அவருக்கு.
பட்டுவேஷ்டியும் மார்பில் தவழும் பூணூலும் அவருக்கு இன்னும்
கம்பீரத்தைக் கொடுக்கவே செய்தது. மஞ்சளின் சாயலில் உள்ள மேனியில்
திருநீறு பூசி, ருத்ராட்ச மாலைகள் மார்பில் தவழ, அங்கவஸ்திரம் அதற்கு
இன்னும் சிறப்பூட்டும் அவருக்கு.

அறிவுக்கூர்மையும் தீட்சண்யமும் மிக்க அவரது கூர் விழிகள் எதிரில்
நிற்பவரை ஒரு நொடியில் எடை போட்டுவிடும். ஆணவமும் செருக்கும்
அதிகம் கொண்ட மாமனிதர் எனவும் சொல்லலாம்.
ரங்காச்சாரி எள் என்றால் எண்ணையாக நிற்பார் அவரது தம்பி வரதாச்சாரி.
அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டார். அத்தனை பயபக்தி
ரங்காச்சாரியின் மீது. அண்ணனுக்கு உதவியாக பாடசாலையில் நிர்வாகம்
செய்கிறார்.

ரங்காச்சாரிக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் போகவே. தன் குருவிடம்
பிரம்மச்சாரியாக தீட்சை பெற்றுக்கொண்டார்.
வேதங்களை கற்பிப்பதிலும் சிவனின் பாதங்களை சரண் அடைவதிலும் தன்
கவனத்தை செலுத்தினார்.
தன் தம்பி வரதனுக்கு ராதாம்மாவைத் திருமணம் செய்துவைத்தார்.
ராதாம்மாவும் கணவருக்கு அடங்கிய பெண்ணாக குடும்பத்தைப்
புரிந்துகொண்டு அதன்படியே நடந்துகொண்டார்.
ரங்காச்சாரிக்கு குடும்பப் பொறுப்புகள் கொஞ்சம் குறைந்தது ராதாவின்
சாமர்த்தியத்தால். வீட்டுப் பொறுப்புகளை அவர் நிர்வகிக்க, மற்றவைகளை
வரதரும் அவரும் கவனித்துக்கொள்ள சிறப்பாகவே சென்றது நாட்கள்.

ராதாம்பிகை நிறைமாத கர்ப்பிணியாய் இருக்க, தன் வாரிசின்
வரவுக்காகத்தான் இப்பொழுது மருத்துவமனையில் காத்திருக்கிறார் வரதர்.
முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என சிவனிடம்
வேண்டி நின்றார் சாதாரண மனிதனாய். எப்படிப்பட்ட ஞானியாக இருப்பினும்
இந்த விஷயத்தில் அடிமட்ட புத்தியே இருந்தது அவருக்கு.
ஆண்குழந்தையாக இருப்பின் அடுத்த மகவைப் பற்றிய பயம் இல்லாது
இருக்கலாம். அடுத்து பிறப்பது ஆணோ பெண்ணோ எனப் பதறும் அவசியமும், என்ன
குழந்தை எனப் பயமில்லாமலும் இருக்கலாம். இந்த எண்ணத்திலேயே
தவியாய்த் தவித்தார்.

ஆதவன் மெல்ல மெல்லத் தன் கரங்களை விரித்து வெளிச்சத்தைக் கொடுக்க
ஆரம்பித்தான், இருள் முற்றிலும் விலக வெளிச்சம் பரவலானது.
அந்த நேரத்தில் குழந்தையின் வரவு ஆரம்பமானது.
ராதாம்பிகையின் அழுகை சப்தம் கேட்கக் கேட்க, கணவனாய் தந்தையாய்
உள்ளம் துடிக்க, அவரது உதடுகள் விடாமல் சிவனின் நாமத்தை
சொல்லிக்கொண்டே இருந்தது, இம்முறை மனைவியின் ஆரோக்கியத்தை
நினைத்துப் பதறினார். எதுவோ ஒண்ணு நல்லபடியாக பிறக்கட்டும், என்ற
எண்ணம் உதித்தது அவருக்கு.

தாய் தகப்பனைப் படுத்தி எடுத்துவிட்டு இவ்வுலகை எட்டிப் பார்த்தது
மகாலட்சுமியின் அம்சமான அழகான பெண்குழந்தை.
சிறிது நேரத்தில் தாதி குழந்தையை அவர் கையில் கொண்டு வந்து
கொடுத்தார்.
"பெண்குழந்தை பிறந்திருக்கு, தாயும் சேயும் நலமா ஆரோக்கியமா
இருக்காங்க" அனைவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றார்
அவர்.

வரதாச்சாரியின் கரத்தில் இருந்த குழந்தையின் அழகில் அனைவரும்
மயங்கிப் போனார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப் பொலிவுடன் மின்னியது.
பெண்ணரசி தேவதையைப் போலவே குட்டி உதடுகளை நெளித்து
புன்னகையை அனைவருக்கும் கொடுக்க,அதில் மயங்கினார் வரதாச்சாரி,
ஒரு நிமிடம் ஆண்குழந்தை இல்லையே என்ற கவலையை மறந்து

என் மகள் இவள் என்ற கர்வமும் வந்தது.

அவருக்கு வயதின் காரணமாய் கைகளில் லேசாய் நடுக்கம் இருக்க, குழந்தையைக்
கையால் எடுக்க முடியாமல், மகன் கையில் இருந்த பேத்தியை எட்டிப்
பார்த்தார் அவரது தாய், "அடடா எத்தனை அழகா இருக்கா குழந்தை"
வரதாச்சாரியின் அம்மா கொஞ்சினார்.

“பையனா இருந்திருந்தா ரெட்டிப்பு சந்தோஷம் கிடைச்சிருக்கும் அம்மா.
பொண்ணாப் போயிட்டாளே. இனி அடுத்தது பிறந்து, ஒருவேளை அதுவும்
பொண்ணாவே போயிட்டா நான் என்ன பண்ணட்டும்?” வரதர் தன் மகளையே
பாசமாய் கண்களில் கனிவுடன் பார்த்தவாறு மனத்தாங்களுடன் சொன்னார்.
“அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காதேப்பா. பையனோ பொண்ணோ
ஆரோக்கியமாய் பிறந்திட்டான்னு சந்தோஷப்படனும் நாம. அதைவிட்டுட்டு
குழந்தை மேல வெறுப்பைக் கொட்டறது நல்லதுக்கு இல்லைப்பா” மகனைக்
கண்டித்தவர், “நம்ம வீட்டுலயே முதன் முதலா பிறந்த பெண்குழந்தை இது வரதா.

மூணு தலைமுறையா பொண்ணுங்க பிறக்கவே இல்லை. என்னவோ சாபம்னு
சொன்னாங்க. உன் அப்பா எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு அவர்
காலத்துல பிறக்கவே இல்லை. பரிகாரம் பண்ணியும் தப்புகள் நடந்தா அதுக்கு
மதிப்பே இருக்காதே.
உங்கண்ணனும் சும்மா இல்லை ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கிட்டான்..
அதுவும் யார்கிட்ட பகைச்சுக்கக் கூடாதோ அவங்ககிட்ட தீராத பகையை
வாங்கிக்கிட்டான். எனக்கென்னவோ அது இன்னும் முடியலைன்னுதான்
தோணுது” கண்கள் கலங்க வேதனையுடன் சொன்னவர், வடக்குப்பக்கம்
யோசனையாகப் பார்த்தார்.

“அண்ணனைத் தப்பாப் பேசாதீங்கம்மா. நமக்காக வாழ்க்கையையே தியாகம்
பண்ணியிருக்கார் அவர்” வரதர் தாயின் பேச்சை மறுத்தார்.
“அவனை தப்பா சொல்ல என்னப்பா இருக்கு. ஆண்கள் செய்யும் தப்புகளை
தப்புன்னு சுட்டிக்காட்டும் உரிமை பொண்ணுங்களுக்கு எங்க இருக்கு?.
எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கோம் நாங்களே. உங்கப்பா
காலத்தில் இருந்து உங்க காலம் வரைக்கும் நான் கேள்வி கேக்கக்காம
அடங்கி தானே போறேன். உன் அண்ணங்கிட்ட நின்னு பேசறதுக்கு
விடுவானா? உனக்கென்ன தெரியும்னு அடக்கிட்டு போய்டுவான்..
ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோப்பா.

நீ பண்ணியிருக்க புண்ணியமோ இல்ல ராதாவுக்கான அனுக்கிரகமோ
தெரியலைப்பா. இப்ப உனக்கு பொண்ணு பிறந்திருக்கு வரதா, வந்த
மகாலட்சுமியை வேணாம்னு சொல்லிட்டு தப்பு பண்ணிக்கிட்டு இருக்காதே.
தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க வேணாம் நீயும்” கண்டித்தார் நல்ல
தாயாய்.
“அதுவும் சரிதானம்மா. எல்லாம் பரமேஸ்வரின் விருப்பம்தான். நம்ம கையில்
என்ன இருக்கு? என் மகளை இளவரசியாய் வளர்த்திக் கொடு நீ. அதுபோதும்
எனக்கு” வரதர் வெளியே சந்தோஷமாக சொன்னாலும் மனதில்
வருத்தப்பட்டார்.
“நான் எதுக்கு இருக்கேன். ராணியாட்டம் வளருவா என் பேத்தி” பேத்தியை
செல்லம் கொஞ்சினார் பாட்டி.
அன்றே ராதாம்மாவை வேறு அறைக்குள் மாற்றிவிட்டனர், குழந்தையை
ராதாம்மா கையில் கொண்டு போய் வைக்க தன் மகளின் நெற்றியில் முத்தம்
பதித்தவர், “குழந்தை அழகா இருக்காங்க” சந்தோஷப்பட்டார்.

“ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன் ராதா” வரதர் கவலை நிறைந்த
புன்னகையுடன் சொன்னாலும் மகளின் கன்னத்தை செல்லமாய்த்
தட்டியவாறே கொஞ்சினார்.
“அதனால் என்னங்க? அடுத்த குழந்தை பையனா பெத்து தரேன்” ராதாம்மா
நிறைவான சிரிப்புடன் கணவனைத் தேற்றினார்.

ஒரு வாரம் செல்ல..
குழந்தையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்
வரதாச்சாரி. முறைப்படி பிறந்த வீட்டிற்குத்தான் ராதாம்மா செல்ல வேண்டும்.
ராதாம்மாவின் தாயார் வேதவதி அதற்கான ஏற்பாடுகளைத்தான்
செய்திருந்தார். ஆனால் தலைக்கணம் மிக்க ரங்காச்சாரியோ மறுத்துவிட்டார்.
“எங்க வீட்டுல வளரட்டும்” என புகுந்த வீட்டுக்கே வருமாறு கண்டிப்புடன்
சொல்லவே. ராதாவின் பெற்றவர்களுக்கு மனதுக்குள் வருத்தம் இருந்தாலும்
விட்டுக்கொடுத்துப் போனார்கள் பெருந்தன்மையாய்.

தங்கள் வீட்டின் மகாலட்சுமியை வரவேற்பதற்காய் அந்த வீடே
சந்தோஷமாய்க் காத்திருந்தது.
“ஏம்மா மருமகளே ஆரத்தியை கரைச்சு எடுத்துட்டியா?” கேட்டவாறே வீட்டு
வாசலில் கால் எடுத்து வைத்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி
விழுந்தார் ராதாம்மாவின் மாமியார்.

வந்த வண்டியிலேயே திரும்ப அழைத்துப் போய் சிகிச்சை செய்தும்
பலனில்லை இறந்து போனார் வரதரின் தாயார்.
நொடியில் அந்த வீட்டின் தோற்றங்களும் மனநிலைகளும் மாறிவிட, துக்க
வீடாக மாறிப் போனது. அதுமட்டும் இல்லாமல் துக்க வீடு என்பதால் பூஜை
அறையில் உள்ள தீபத்தை அமர்த்திவிடப் போக, பூஜை அறையில்
தீப்பிடித்தது கவனக்குறைவால்.

அது ஒருபக்கம் பரபரப்பாய் ஆனது. அது போதாதென தீக்காயமும் பட்டுவிட,
நடப்பதை எல்லாம் அவதானித்து இருந்த வரதரின் அண்ணா ரங்காச்சாரிக்கு
மனதில் நெருடல் எழுந்தது.

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை இவள். இவள்
வரவு குடும்பத்திற்கு நன்மையைத் தருமா? யோசனையில் ஆழ்ந்தவர்
யாரிடமும் பேசாமல் தன் தாயின் இறுதிக் காரியங்களை கவனிக்க
ஆரம்பித்தார். தாய்க்கு தலைப்பிள்ளை காரியம் செய்யவேண்டுமென்பது மரபு
ஆதலால் ரங்காச்சாரி தன் கவனத்தை திசை திருப்பினார் சற்று
நெருடலுடனேயே..

வந்திருப்பவர்களின் வாயில் அந்தக் குழந்தையின் நேரமும் ராசியுமே
றைபட்டது. “பொண்ணு பிறக்கணும்னு தவமா தவம் இருந்தாங்க. ஆனா
பாரேன் பிறந்தும் ராசியில்லாம போயிடுச்சு.. இப்பவே இப்படின்னா நாளாக
ஆக இன்னும் என்னென்ன நடக்குமோ” இப்படி காதில் விழுமாறும்,
நேரடியாகவும் பேசப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை என்றால் குழந்தையின்
பெற்றோர்களுக்கோ நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போல
இருந்தது.

ஒவ்வொரு தாய்தகப்பனுக்கும் தான் உயிரைக் கொடுத்துப் பெற்ற குழந்தை
என்றால் அபூர்வம் அல்லவா. அவன் நல்லவனோ கெட்டவனோ
எப்படியிருந்தாலும் அவனுக்காக அடிமனது துடிக்கும்.
ராதாம்மாவுக்கும் வரதாச்சாரிக்கும் அப்படித்தான், இப்பொழுதுதான்
உலகத்தை எட்டி பார்த்திருக்கும் தன் குழந்தையின் நலனே பிரதானமாக
இருக்க, குழந்தையையும் மனைவியையும் எந்தக் கெட்ட சொல்லும் காதில்
விழாதவண்ணம் ராதாம்மாவின் தாய்வீட்டில் விட்டுவிட்டு வந்தார் வரதர்.

“திரும்ப அழைச்சிட்டுப் போக வருவீங்கதானே?” கண்களில்
லைப்புறுதலோடு கேட்டார் ராதாம்மா. அவர் காதில் விழுந்த பேச்சுகள்
அப்படியிருக்க, அவரது சஞ்சலமும் நியாயமாகவே இருந்தது.

“நான் சிவனடியார் ராதா. எனக்கு நீதான் விசாலாட்சி. இந்த ஜென்மத்துக்கு
நீயே போதும். அடுத்த ஜென்மமே நமக்கு வேணாம்னு அந்த சிவனை
பிரார்த்திக்கறேன் அனுதினமும்” மனைவியிடம் சொன்ன வரதர் திரும்பியும்
பாராமல் சென்றார் மனைவியின் அழுத முகம் பார்க்கத் தெம்பில்லாமல்..
போகும் போது மனைவி மகளைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளச்
சொல்லிவிட்டுச் செல்லும் மாப்பிள்ளையைக் கவலையாய்ப் பார்த்தவர், “கை
நனைக்காம போறாரே மாப்பிள்ளை?” ராதாவின் தாய் வேதவதி
கவலையாய்க் கேட்டார்.


ஒரே மருமகன் அவருக்கு, உபசரிக்க விரும்பினார்.
தன் பெண் வசதி வாய்ப்பில்லாமல் இருக்கும் ஏழை அந்தணர் குடும்பத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதகமும் மனசும் பொருந்திப் போக ஊரே
மெச்சும்படி திருமணம் செய்துகொண்டார் என்று , மதிப்பும் மரியாதையும்
அதிகமாகவே இருந்தது அவருக்கு மருமகன் மீது.

“அவர் வீட்டில் காரியம் நடந்துட்டு இருக்கையில் நம்ம வீட்டில் விருந்து
சாப்பிடுவாரா வேதா? அடக்கம் பண்ணி முடிக்க வரை பச்சை தண்ணி கூடக்
குடிக்க கூடாது தெரியாதா உனக்கு?” சிவநாதர் மனைவிக்கு எடுத்துச்
சொன்னார்.
“அதுவும் சரிதான். நீ வாடா கண்ணா உனக்கு பாட்டி கதை சொல்றேன்” என
மார்போடு அணைத்துக்கொண்டார் குழந்தையை.
 
Last edited:

Sweet Sundari

Administrator
Staff member
Nov 16, 2024
30
4
8
Chennai
sweetsundari.com

யாருக்கும் சுவடில்லை இங்கு

அத்தியாயம் 2

காசியில் மரணம் என்பது அன்றாடம் நிகழும் நிகழ்வு போல சாதாரண விஷயமாகக் கருதுவர். மரணத்தை பெரிய வரமாகக் கருதி காசிக்கு செல்பவர்களும் உண்டு.

இயற்கைக்கு கூட சில காலகட்டங்களில் அழிவுண்டு என்று கூறலாம். ஆனால் காசியில் உள்ள மயானத்தில் பல நூறுவருடங்களாய் அல்லது அதற்கு மேலேயும் தகன மேடையில் எரியும் நெருப்பு அணைந்ததே இல்லை என்பர். அழியாத அமரஜோதியாய் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும் அங்கு.

மரணம் என்பது நிகழக்கூடிய ஒன்றுதான் என்பது அந்த ஆச்சாரியருக்கு புரிந்தே இருந்தாலும் இறந்தது தன்னை வளர்த்தி ஆளாக்கிய தாய் என்பதால் துக்கம் அதிகமாய் இருந்தது.

இதன் காரணமாய் ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தையின் மீது அவர் மனது பழிபோட்டது..
குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லையோ என்றும் அவரை நினைக்க வைத்தது.

துக்க காரியம் நிகழ்ந்த வீட்டில் நாற்பத்திஎட்டு நாள் காரியங்கள் எல்லாம் முதுவிட்ட நிலையில் அப்பொழுதுதான் ஓரளவு நடப்புக்கு வந்தனர் வீட்டில்.

வீட்டின் ஆண்கள் டித்அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்க, பெண்களும் அப்போதைக்கு எந்த வேலையும் இல்லாததால் அங்கே உள்ள திண்ணையில் விரிப்பை விரித்து ஓய்வாக அமர்ந்திருந்தார்கள்.

ரங்காச்சாரிதான் முக்கியமான விஷயமாக பேசணும் என அனைவரையும் எங்கேயும் போகாமல் இருக்க வைத்திருந்தார்.

ரங்காச்சாரி தாய்க்கு தலைப்பிள்ளை என்பது போல அவரே அனைத்து காரியங்களையும் செய்திருந்தார், அன்றிலிருந்து இன்றுவரை எதுவுமே பேசவில்லை, அவரது மனநிலை அவரைப் பேசவும் விடவில்லை என்பதே உண்மை.

வெகு காலங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தை இது. வீட்டில் ஆண்குழந்தைகளே இருக்கின்றனர், அணைத்துக் குழந்தைகளுக்குமே தங்களுடன் விளையாடப் பெண் குழந்தை வருகிறாள் என்பதில் மிக்க மகிழ்ச்சியாகும்.

ஆனால் அந்தக்குழந்தை வீட்டுக்குள் கூட கால் எடுத்து வைக்காத நிலையில் ஒரு இறப்பு நேருவது சாதாரண விஷயம் இல்லையே.

யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார் ரங்காச்சாரி. கடந்த சில நாட்களாக அவருக்கு வரும் கனவுகளும் அந்த அளவுக்கு நல்லவிதமாக இல்லை. இரவு முழுக்க தூங்கக்கூட விடாமல் அலைகழித்துக் கொண்டே இருந்தது அவரை.

ஒரு பெண் நெருப்பின் நடுவே நின்று சிவந்த விழிகளுடன் அவரையே கோபமாய்ப் பார்ப்பது போலவெல்லாம் கனவில் தோன்ற அடித்துப்பிடித்து எழுந்தமர்வார் நடு இரவில்.

சுடுகாட்டின் சாம்பலை வாரித் தேகத்தில் பூசியபடியே ஒருவன் உக்கிரமாய் வீட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல பிரம்மை எழ, அர்த்தராத்திரியில் வெளியில் வந்து பார்ப்பார், அப்படி யாரும் இருக்கிறாரா என்று.

“என்ன இதெல்லாம்? நடப்பவை எதுவுமே சரியில்லையே. கனவுகளும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் பிரம்மை போலவே இல்லையே. தத்ரூபமாய் நடப்பது போலவே இருந்தது.

இதுநாள் வரை இல்லாதது இப்போது என்ன வந்தது?” யோசனையாய் வீட்டின் வாசலில் நெற்றியில் கைவைத்து இடிந்து போய் அமர்ந்துவிட்டார் ஆச்சாரியார்.

வேதமும், மந்திரங்களும் கற்ற மகான் அவர், தாயின் இறப்பும் அதைத் தொடர்ந்த கனவுகளும் தாயின் இழப்பால் நேரிட்டது என்று எதார்த்தமாக நினைக்க அவர் தயார்தான்.

ஏனெனில் தாயின் மீது வைத்த பாசம் மனதை பேதலிக்கத்தான் செய்யும் சிறிது காலம் வரையில். பெற்ற தாயின் இறப்பு சாதாரணமான ஒன்றில்லையே.

ஆனால் பெண் குழந்தைகளே பிறக்காத தங்கள் வீட்டில் முதன் முதலாக ஒரு பெண் குழந்தை பிறக்கவும். அக்குழந்தை வீட்டுக்குள் கால் வைத்ததும் வீட்டின் ஆணிவேரான தன் தாயின் இறப்பும் சேர்த்து அவரைக் குழப்பிவிட்டது. அவர் படித்த படிப்பு எல்லாம் மறந்த நிலையில் ஒன்றும் புரியாத நிலையில் இருந்தார்.

யோசித்து யோசித்து ஒரு முடிவை எடுத்தேவிட்டார். அதனால் என்ன பாதகம் நேரிட்டாலும் சமாளிக்கலாம் என்று.

அனைவரும் அங்கே வந்தமர்ந்து கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட, ரங்காச்சாரி கண்களை மூடி யோசித்தபடியே இருந்தார்.

நடப்பவை நல்லபடியாக முடிந்தால் சரிதான். ஆனால் கெட்டதாக முடிந்தால்?... இதுவே அவரது மனதை வெகுவாக வாட்டியது. தான் திருமணம் ஆகாதவன் அதனால் தனக்கு எதுவுமில்லையென்றும், வரதருக்கும் பிரச்சனையில்லை என்றும் வைத்துக்கொண்டாலும், மற்றவர்களுக்கும் இதில் சம்மதம் இருக்கனுமே. குறிப்பாய் குழந்தையின் தாய் இதற்கு சம்மதிக்கனுமே.

"அண்ணா என்ன விஷயமா கூப்பிட்டு விட்டிருந்தீங்க?" பொறுமை இழந்து கேட்டார் வரதர்.

"வரதா நம்ம குருவை வரச்சொல்லிக் கேட்டிருக்கேன். வரேன்னுட்டிருக்கார். கொஞ்சம் பொறு அவர் வந்த பிறகே மேற்கொண்டு பேசிக்கலாம்" ரங்காச்சாரி தம்பியை அமைதிப்படுத்தினார்.

அனைவருக்கும் என்னவாக இருக்கும் என்ற கவலை வரவே பொறுமையாக இருந்தனர்.

ரங்காச்சாரி திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்துவிட்டார். திருமணத்தின் மீது அவருக்கு விருப்பமே இல்லாமல் போய்விட்டது. தன் குடும்பத்தை நல்லபடியாய் வழி நடத்தினாலே போதும் என்ற நிலையில் இருந்துவிட்டார்.

குருக்கள் பத்மாச்சாரி வந்துவிட அனைவரும் பரபரப்பாக எழுந்து நின்றனர்.

"வணக்கம் குருவே" ரங்காச்சாரியும் வரதாச்சாரியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

"ஓம் நமச்சிவாய!... தீர்க்காயுசா இருங்கப்பா" வாழ்த்தியவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

அவர் தீட்டு வீட்டில் கைநனைக்க மாட்டார் என்பது தெரிந்தாலும் பார்மாலிட்டிக்காக கேட்டார், "ஏதாவது குடிச்சுட்டு பேசலாமா குருவே" தர்மசங்கடமாகக் கேட்டார் வரதர்.

"டேய் என்கிட்டே என்னடா சாங்கியம். சாவு நடந்த வீட்டுல நான் கைநனைக்க மாட்டேன்னு தெரியாதா? குழந்தையோட ஜாதகமும் தகப்பனோட ஜாதகத்தையும் எடுத்துட்டு வாங்க" சொன்னவர் அவருக்காக விரிக்கப்பட்டு இருந்த விரிப்பில் அமர்ந்துகொண்டார்.

கையிலேயே தயாராய் வைத்திருந்த குழந்தையின் பிறந்த நாள் குறிப்பையும், வரதரின் ஜாதகத்தையும் அவரிடம் கொடுத்தார் ரங்காச்சாரி.

வரதரோ திகைப்புடன் நின்றிருந்தார், ரங்காச்சாரி ஜாதகம் பார்ப்பது பற்றி அவரிடம் எதையும் சொல்லவே இல்லை. அதனால் ஏதாவது யோசனை கேட்பதற்காக அழைத்திருப்பார் என்றே நினைத்தார். ஆனால் குழந்தை எனவும் அவருக்கு பயம் வந்தது.

பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தவர்தான், ஆனால் அதற்காக குழந்தையை வேண்டாம் என அவர் நினைத்தே பார்த்தது இல்லை. அதனால் பதட்டத்துடன்,

"அண்ணா இப்போதானே ஐம்பது நாள் போயிருக்கு, ஒரு பத்து நாள் போகட்டுமே. குழந்தைக்கு மூணு மாசம் போனாத்தான் ஜாதகம் பார்க்கணும்னு சொல்லுவாங்க, அதனால் கொஞ்சம் பொறுமையாய் இருக்கலாமே" ஒரு தகப்பனாய் அவருக்கு பயம் வந்தது.

குடும்பத்தலைவரான ரங்காச்சாரியின் பேச்சை மீறவும் முடியாது அவரால்.

இந்த விஷயத்தில் ஒரு தகப்பனாய் தாயாய் அவர்களுக்கு முடிவெடுக்க உரிமையில்லையா? இப்படியும் இருப்பார்களா என்றும் கூட நினைக்கலாம். ஆனால் இன்னும் சில குடும்பங்களில் பெரியவர்களின் பேச்சை வேதவாக்காக நினைக்கும் பழக்கம் இருக்கின்றதை மறுக்க முடியாதுதானே.

"இல்ல வரதா எனக்கென்னவோ மனசே சரியில்லை. எதுவா இருந்தாலும் இன்னைக்கே முடியட்டும்" ரங்காச்சாரி உறுதியாக இருந்துவிட்டார்.

சரி நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்தவராய் சிவனே என அமர்ந்துவிட்டார் வரதர்.

"சரி ஆரம்பிக்கலாமா?" பத்மாச்சாரி ஜாதகங்களை பார்வையிட ஆரம்பித்தார்.

நல்லபடியாக சொல்லவேண்டும் என பெண்கள் மனதிற்குள் பதறினார்கள், பெண்குழந்தை பிறக்க வேண்டும் என அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. அப்படியிருக்கையில் அபூர்வமாக கிடைத்ததை கைநழுவ விடுவோமோ பதறினார்கள்.

"இந்த ஜாதகம் ஆக்கப்பிறந்தது இல்லை ரங்காச்சாரி. அழிக்கப் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஆயுசு இருபத்தியொண்ணுதான். ஆனால் இந்த ஜாதகத்தோட ஆயுள் முடியும்போது உங்க குடும்பத்தோட அழிவு ஆரம்பமாகும்" அவர் கணித்துச் சொல்ல.

அதைக் கேட்டதும் அங்கே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

"குருவே கொஞ்சம் சரியாய் பார்த்து சொல்லுங்க. என் பொண்ணோட வாழ்க்கை இது. தப்பாய் போயிட்டா என்ன பண்ணறது" வரதர் பதறினார்.

ரங்காச்சாரியோ அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்.

"என் கணிப்பு பொய்யானதில்லை வரதா. கிட்டத்தட்ட உங்க குடும்பத்துக்கான சாபக்கணக்கு உச்சம் அடையும் காலம் நெருங்கிடுச்சு. நடக்கறது நல்லதோ கெட்டதோ அதை ஏத்துக்கத்தான் வேணும் எல்லோரும்" பத்மாச்சாரி கண்டித்து சொன்னார்.

தன் சீடன் தன்னை தவறாகச் சொல்வதா என்ற கோபம் அவருக்கு வந்தது.

"இதுக்கு மாற்று இல்லையா குருவே?" அனைத்தையும் அறிந்த ரங்காச்சாரியே மீண்டும் கேட்க.

"பாசம் அறிவை மறைக்கறது தப்பில்லை ரங்காச்சாரி. ஆனால் எது எப்படியானாலும் நடக்கறது நடந்தே தீரும். இனி அந்த சிவன்தான் துணை உங்களுக்கு. எதையும் தடுக்க முடியாது யாராலும்" அவர் சொல்ல.

"குழந்தையை என்ன பண்ணலாம்?" ரங்காச்சாரி தயங்கித் தயங்கிக் கேட்டார்.

"யாரோ பண்ணிய பாவத்துக்கு நீங்க அனுபவிக்கறீங்க ரங்காச்சாரி. திரும்ப ஒரு தப்பைப் பண்ணி புதுசாய் ஒரு கணக்கை உருவாக்கிடாதீங்க. குழந்தை உங்ககிட்டயே வளரட்டும்" எச்சரித்தவர் கிளம்பிவிட்டார் அங்கே இருந்து.

போகும்பொழுது ஒருநிமிடம் நிதானித்தவர், "அந்தக் குழந்தையின் பெயர் சுவாதின்னு வைங்க" எனக் கூறிவிட்டு விலகினார்.

"அண்ணா?" வரதர் பயத்தோடு ரங்காச்சாரியை அழைத்தார்.

‘மனிதர்கள் ஒருகணக்கு போடலாம். ஆனால் இறைவன் அதற்கு தனியாய் ஒரு கணக்கு வைத்திருப்பாரே பொறுத்திருந்து பார்க்கலாம் ரங்கா’ மனதில் விதியை நினைத்து சிரித்தவாறே பத்மாச்சாரி வீதியில் நடந்தார்..
 
Last edited:

Sweet Sundari

Administrator
Staff member
Nov 16, 2024
30
4
8
Chennai
sweetsundari.com
அத்தியாயம் 3

பத்மாச்சாரி பெரிய பாராங்கல்லை அசால்ட்டாக தூக்கி அனைவரின்
தலையிலும் போட்டுவிட்டு கம்பீரமாக தன் கடமை முடிந்தது எனப்
போய்விட்டார்.
அவர் போன பின்னர் அனைவருமே பேயறைந்தது போல அசையாமல்
இருந்தனர்.
சகோதரனின் மனதை நன்கு அறிந்திருந்த ரங்காச்சாரிக்கு அவரது மனநிலை
புரியவே செய்தது. ஆனால் தனக்கும் வேறு வழி இல்லையே. தன்
குடும்பத்தையும் கவுரவத்தையும் காக்கும் பொருட்டு முடிவெடுத்துவிட்டு,
"இப்போ அடுத்து செய்ய வேண்டியதைப் பார்க்கலாம் வரதா" தம்பியின் முகம்
பார்த்துச் சொன்னார்.

"அடுத்து என்ன?" தனக்குள்ளேயே பேசிய வரதருக்கு அண்ணனை எதிர்த்துப்
பேசவும் பயமாக இருந்தது.
"நான் யோசிச்சு சொல்றேன் வரதா. நீ போய் உன் பொண்டாட்டி
பிள்ளைகளோட இருந்துட்டு வா" தம்பியை அனுப்பி வைத்தவருக்கும்
குழப்பமாக இருந்தது.
"எல்லோரும் போய் அவரவர் வேலையைப் பாருங்க" அங்கே அவர்
முகத்தையே ஆராய்ந்து பார்த்திருந்த பெண்களையும் அனுப்பி வைத்தவர்
காசிநாதரை தரிசிக்க கிளம்பிவிட்டார்.
விஸ்வநாதரை தரிசிக்கும் பொருட்டு குறுக்கு சந்தில் இறங்கி நடந்தவர்
எதிரில் வரும் மாடுகளையோ மனிதர்களையோ கணக்கில்
எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் மனது, தான் அடுத்து செய்ய இருக்கும்
காரியத்திலேயே கவனமாய் இருந்தது.

வெண்மையான சலவைக் கல்லால் ஆன பரந்த முற்றம், அதன் நடுவில்
நான்கு வாயில்கள் கொண்ட மண்டபம் கம்பீரமாய் நின்றிருந்தது. அதுதான்
சன்னதியும் கூட. அதனுள் சென்றால் தரையில் இறைவன் வீற்றிருப்பார்.
அவரை சுற்றி அர்ச்சகர்கள் பூஜை செய்துகொண்டிருந்தார்கள்.
சன்னதியை ஒருமுறை கையெடுத்து கும்பிட்டவர் உள்ளே நுழைந்தார்.
மனக்குழப்பத்துடன் இறைவன் முன் நின்றவருக்கு,
“ஹர ஹர மகாதேவா” என்ற நாமத்துடனும் வேத மந்திரங்களுடனும்
காட்டப்படும் ஆரத்தி அவரை மெய்சிலிர்க்க வைக்க, கண்ணீருடன்
வணங்கினார்.

தாய் இறந்து நாற்பத்தியெட்டு நாள்தான் கழிந்திருப்பதால், இறைவன்
அருகில் சென்று அவரை தொட்டுணர்வதற்கு அவரது மனசாட்சி இடம்
தரவில்லை, அதனால் மண்டபத்திற்கு வெளியே சிறிதுநேரம் அமர்ந்திருந்து
விட்டு வெளியே வந்தார்.
காசிநாதரை தரிசனம் செய்துவிட்டு வந்தவரின் மனதில் ஒரு முடிவும்
பிறந்திருக்க, சரியோ தவறோ தன் குடும்பத்தின் எதிர்காலம்தான் முக்கியம்
என்ற முடிவிற்கு வந்துவிட்டார். குருவின் வார்த்தைகளை மீறவும் சித்தம்
கொண்டார் அவரது சூழ்நிலையில்.
எதிர்காலத்தை தீர்மானிப்பது மனிதன் அல்ல விதி மட்டுமே என்பதை
ஞானியான அவரும் உணர்ந்தே இருந்தாலும் இந்த விஷயத்தில் தடுமாறிப்
போனார்.

கங்கையில் இறங்கி முழுக்கு போட்டார், தான் எடுத்த முடிவுக்கான
பாவக்கணக்கை இப்போதிருந்தே தீர்க்க ஆரம்பித்தார். பாவக்கணக்குகள்
செய்யும் பாவங்களைப் பொறுத்து அல்லவா தீரும். தீராத பாவங்கள் எனில்
அதை சந்திக்கத்தான் வேணும்.
முழுதாக ஒரு மாதம் போன பிறகு ரங்காச்சாரி வரதரைக் கூட்டிக்கொண்டு
ராதாம்மாவின் பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தங்கள் வீட்டுப்பெண்ணையும் குழந்தையையும் அழைத்துப் போக
வந்திருக்கிறார்கள் என்று மகிழ்ந்தவர்கள் ஆண்கள் மட்டுமே வந்திருக்கவும்
குழப்பமானார்கள்.
முறைப்படி பெண்களும்தானே வரணும்? கவலையாய்ப் பார்த்தாலும்,
சுதாரித்து அவர்களை உபசரிக்கலானார்கள்.
"வாங்க மாப்பிள்ளை, வாங்க வாங்க சம்பந்தி" இருவரையும் வரவேற்று
உபசரிக்க, ரங்காச்சாரி பச்சை தண்ணீரைக் கூட வாங்கிக் குடிக்கவில்லை.
தூளியில் இருந்த குழந்தையை கண்ணால் பார்ப்பதும் கூடப் பாவம் என
நினைத்தவராய் அதன் பக்கம் திரும்பவும் இல்லை.
அவரது இறுகிய முகம் பார்த்த வேதவதிக்கு கவலை பிறந்தது. என்னவாக
இருக்கும்னு தெரியலையே, மகளின் வாழ்க்கையை நினைத்து பயம்
கொண்டார்.

"இங்க நான் விருந்தாட வரலை சிவநாதரே. குழந்தையை வாங்கிட்டுப் போக
வந்தோம். எங்க குழந்தையை எங்ககிட்ட மறுபேச்சு பேசாமல் தருவீங்கன்னு
நம்புறேன்" ரங்காச்சாரி வெட்டென்று சொன்னார்.
அவர் பேச்சு தப்பாய்ப் படவே, "புரியலை சம்பந்தி, முறைப்படி உங்க
மருமகளையும் குழந்தையையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே.
அதென்ன குழந்தையை மட்டும் கூட்டிட்டுப் போறது? அப்போ என
பொண்ணோட வாழ்க்கை?" அதிர்வோடு கேட்டார்.
உள்ளே இருந்து இவர்கள் பேசுவதைக் கேட்ட ராதாவுக்கு தப்பாய் பட்டது.
அறையை விட்டு வெளியே வந்தார்.
"இந்தக் குழந்தை எங்க வீட்டுக்கு அழிவைத் தரும். அதனால இவளைக்
கங்கையில் விடலாம்னு நினைக்கறோம் நாங்க" ரங்காச்சாரி தலையில்
அடித்ததைப் போலச் சொல்ல.

"அய்யோ என் பிள்ளையை நான் தரமாட்டேன் தரவே மாட்டேன்" ராதாம்மாள்
குழந்தையை தன் மார்போடு அணைத்துக்கொண்டு உள்ளே ஓடினார்.
வேதனையுடன் செல்லும் மகளை ஒரு முறை பார்த்தவர், “குழந்தை என்ன
பாவம் பண்ணும். அதுக்கு இப்படியொரு பாவகாரியத்தை பெரிய மனுஷன்
நீங்கள் பண்ணலாமா?” கவலையுடன் கேட்டார் வேதவதி.
"நாங்க முடிவு எடுத்துட்டோம் சம்பந்தி. உங்க பொண்ணு அவ புருஷனோட
வாழனும்னா நாங்க சொல்றதைக் கேளுங்க. அப்படி இல்லைன்னாலும்
குழந்தையை எப்படி எடுத்துட்டுப் போறதுன்னு எனக்குத் தெரியும்"
அவர்களிடம் எச்சரித்தார்.

"குழந்தையை கொல்றது பாவம் இல்லையா. படிச்சவர் நீங்களே இப்படி
செய்யலாமா? கொஞ்சம் கருணை வைங்க" வேதவதி பேத்திக்காக அழுதார்.
"வரதா குழந்தையை தூக்கிட்டு வா" ரங்காச்சாரி முடிவாக கூறிவிட்டு அங்கே
இருந்து போய்விட்டார்.
தன் மனைவியின் அறைக்குள் போனவருக்கு மனைவி குழந்தையை
அணைத்துக்கொண்டு அழுவதைப் பார்த்து இதயமே கனத்தது. தன் ரத்தத்தில்
உதித்த சின்னக்குழந்தை. இதைக் கொன்னுட்டு உசுர் வாழனுமா? வாயைத்
துண்டால் பொத்தியவர் அங்கேயே மடிந்தமர்ந்து அழுதார்.
அதுவரை தன் குழந்தையைப் பற்றி மட்டுமே நினைத்து துன்பத்தில் இருந்த
ராதாம்மாவுக்கு கணவர் அழுவதைப் பார்த்ததும் கதறிவிட்டார்.
"நம்ம பொண்ணு அவளைக் கொல்ல நினைக்கறீங்களே? உங்களுக்கு எப்படி
மனசு வந்துச்சு" அழுத மனைவியைத் தன்னோடு அணைத்துக்கொண்டார்.
“நீ எதுக்கும் கவலைப்படாதே சந்திரா. இறைவன் நமக்கு நல்லதை மட்டுமே
செய்வார்ன்னு நம்புவோம்” மனைவியை ஆறுதல்படுத்தியவரும்
பெண்பிள்ளை போல அழ ஆரம்பிக்க.

கணவரைத் தன் மடியில் படுக்க வைத்து அணைத்துக்கொண்டார். அவரின்
கண்ணீர் வரதரை நனைக்க குற்ற உணர்வில் குறுகிப் போனார் தான் செய்யப்
போகும் காரியத்தை நினைத்து. தன்னை நம்பும் மனைவியை
ஏமாற்றுகிறோமே என நொந்து போனார்.
அன்று அங்கேயே அவர் தங்கிவிட்டார்.
இரவில் எல்லோரும் தூங்கிவிட, வரதர் அண்ணனின் சொல்படி குழந்தையை
யாரும் அறியாமல் தூக்கிக்கொண்டு வெளியேறினார் இரவோடு இரவாக.
அதிகாலை நான்கு மணி இருக்கும்,
“என்கிட்டே கொடு வரதா நான் பார்த்துக்கறேன்” ரங்காச்சாரி தன் கையை
நீட்ட.
“அண்ணாஆ!” எதிர்த்துக் கேள்வி கேட்கவும் தயங்கியவராக தடுமாறி
தலைகுனிந்து குழந்தையை மார்போடு அணைத்தபடி நின்றார் வரதர்.
தன் உயிரையே வேரோடு பிடுங்கி எடுப்பதைப் போல உணர்ந்தார் வரதர்.
தனக்கே இந்நிலை எனில்.. இதைச் சந்திரா தாங்கிக்குவாளா? அவளுக்குத்
தான் என்ன பதில் சொல்லுவோம். குழந்தையை கொன்னுட்டியே பாவி எனத்
தன் முகத்தைப் பார்த்து ஒற்றைக் கேள்வி கேட்டாலும் தான் மரித்துப்
போவோமே. கண்களில் கண்ணீர் வழிந்தவாறே இருக்க.
குழந்தையை அண்ணனிடம் தரவுமில்லை. அப்படியே சிலை போல நின்றார்.
"வரதா நம்ம குடும்பத்துக்காக நாம சாகக்கூடத் தயாரா இருக்கணும் புரியுதா?"
என்ற ரங்காச்சாரி, வலுக்கட்டாயமாகக் குழந்தையைத் தன் கையில்
வாங்கிக்கொண்டவர் நீருக்குள் இறங்கினார்.
கனத்த மனதுடன் கங்கையையே வெறித்தவாறு உணர்வற்று நின்றிருந்தார்
வரதர். இயலாமையில் வேறு வழியும் இல்லை அவருக்கு. குழந்தையா?
அண்ணனா? என்றால் அண்ணன்தான் என நிற்பார் உறுதியாக. அந்த
அளவிற்கு பாசமும் பயபக்தியும் கொண்டவர் வரதர்.
அங்கே பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என
அடித்துப்பிடித்துத் தேடிய ராதாம்மா, அக்கம் பக்கத்தில் அவர்கள் போன
திசையைக் கேட்டறிந்து கங்கைக் கரைக்கே பைத்தியம் போல ஓடிவந்தார்,
அவர் பின்னேயே வேதவதியும் சிவநாதரும் ஓடிவந்தனர்.
எல்லா படிக்கரையிலும் தேடியவர்கள் தூரத்தில் நிழலுருவமாய் வரதர்
தெரியவும் "என் குழந்தை" கத்தியபடியே அவரை நோக்கி ஓடினார் ராதாம்மா.
“நம்ம குழந்தை” என வரதர் நிலைத்த விழிகளுடன் தன் சுட்டு விரலை
நீட்டிக்காட்டவும்.

அந்த திசையில் பார்த்தவர் திகைத்து நின்றார். சூரியன் உதயமாக ரங்காச்சாரி
நீருக்குள் போவது தெரிந்தது“அய்யோ என் மகள்” கதறியவாறே,தானும் இறங்கி
நீருக்குள் போனவர் தாமதப்படுத்திவிட்டார் போலும்,
குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மூன்றாவது முழுக்கு போட்டவர்
திரும்ப எழும்போது குழந்தை கையில் இல்லை, சூர்யநமஸ்காரம் மட்டும்
பண்ணிவிட்டு வெறும் கையோடு திரும்பி வந்தார் ரங்காச்சாரி.
எனில் குழந்தை?...

அது பொக்கை வாயைக்காட்டி சிரித்துக்கொண்டே ஒரு சடலத்தின் மீது
சிரித்தபடி படுத்திருந்தது அதன் கையில் ஒரு ருத்ராட்சமாலையும் இருந்தது.
இனி விதியின் விளையாட்டு ஆரம்பமாகும் வெற்றிகரமாக.
 
Last edited: